மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளையிட்டு கொக்கட்டிச்சோலை மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கேக்கை விற்பனை செய்த பேக்கரியில் கடமையாற்றி வந்த ஆண் உட்பட இருவரையும் எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், பெண்ணை சட்டவைத்தியரிடம் முற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாவற்குடாவில் வசித்துவரும் பாலிப்போடி உதயகுமாரி என்ற பெண் சம்பவதினமான கடந்த 26ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளையிட்டு நகரத்திலுள்ள பேக்கரி ஒன்றில் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வே.பிரபாகரன் அண்ணா, தலைவர்" என பெயரை எழுதி வாங்கி கொண்டு அங்கிருந்து கொக்கட்டிச்சோலைக்கு பஸ்வண்டியில் பயணித்துள்ளார்.
அங்கு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தை நோக்கி வீதியால் நடந்து சென்றவர், தலைவரின் பிறந்தநாள் கேக் வெட்ட போறேன் கடையை ஏன் பூட்ட வில்லை? தலைவரை காட்டி கொடுத்து விட்டார்கள், என சத்தமிட்டு சென்ற நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து புலனாய்வு பிரிவினர் அவரை பின் தொடாந்து சென்று, துயிலும் இல்லம் சென்ற நிலையில் கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இவரது கணவர் விடுதலைப் புலிகளில் இருந்து உயிரிழந்துள்ளதாகவும், புலிகளின் மட்டக்களப்பு படை தளபதி றமேஷ் அவர்களுக்கு மச்சாள் முறையான உறவினர் எனவும் தற்போது தனிமையில் நாவற்குடாவில் வசித்து வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த கேக்கை விற்பனை செய்த மட்டு நகரிலுள்ள பேக்கரியில் கடமையாற்றிவரும் கொக்கட்டிச்சோலையைச் சோந்த 35 வயதுடைய பரமேஸ்வரன் முனீஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணையில் குறித்த பேக்கரிக்கு சென்ற பெண் பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கி அதில் பிரபாகரன் பெயர் எழுதிதருமாறு கேட்டுக் கொண்டதற்கு இனங்க பெயரை பொறித்து கேக்கை விற்பனை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண்னை தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட முயற்சித்த குற்றச்சாட்டிலும் அவருக்கு உதவிபுரிந்த குற்றச்சாட்டில் பேக்கரியில் கடமையாறிவந்து கேக்விற்பனை செய்தவர் உட்பட இருவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச் சடத்தின்கீழ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து 29ம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இருவரையும் எதிர்வரும் டிசம்பர் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பெண்ணை மனநிலை பாதிக்கப்பட்டுள்ளாரா என கண்டறிய சட்டவைத்தியரிடம் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டார்
No comments