யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி மீளவும் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு எதிராக சமூக மட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்ட தீர்மானித்துள்ளனர்.
உடுப்பிட்டி விநாயகர் சனசமூக நிலையத்தில், நேற்றைய தினம் சனிக்கிழமை உடுப்பிட்டி சமூகமட்ட அமைப்புக்கள் குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டனர்.
கரவெட்டி பிரதேச செயலாளர் நேரடியாகவும் , வாய் மொழி மூலமாகவும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தனக்கு அறிவுறுத்தியதனால் தான் இடத்திற்கான சிபார்சினை வழங்கியதாக குறிப்பிட்டதற்கு இணங்க சமூகமட்ட அமைப்புக்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி மற்றும் உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து ஐந்நூறு மீற்றர்களுக்கும் குறைவான தொலைவில் உடுப்பிட்டிச் சந்தியிலிருந்து நவிண்டில் நோக்கிய வீதியில் இமையாணன் மேற்கில், பிரதான வீதியிலேயே இந்த மதுபானசாலை அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இமையாணன் இ.த.க பாடசாலையிலிருந்தும் நவிண்டில் தாமோதரா பாடசாலையிலிருந்தும் குறித்த மதுபானசாலை மிகக் குறைந்த தூரத்திலிருப்பதும் மாணவர்கள் மத்தியில் மதுபானப் பாவனையை ஊக்கப்படுத்திவிடும் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments