முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழாவில் துறை சார்ந்த பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஒட்டுசுட்டான் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்ப்பாடு செய்த ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டு பெருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி பரமோதயன் ஜெயராணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த பத்து பேருக்கு பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில், செல்வி துரைராசா றஜிதாவிற்கு இசைத்துறைக்காகவும், மாயவன்சாமி புஸ்பகுமாருக்கு சிற்பத்துறைக்கும், குலேந்திரன் யதுகுலனுக்கு குறும்படத்துறைக்கும், செல்வி எழிலகன் சதுர்மிலாவிற்கு நடனத்துறைக்கும், சிவராசா சிவதீபனுக்கு நாடகத்துறைக்கும், செல்வி தனபாலராஜ் துளசிகாவிற்கு ஓவியத்துறைக்கும், சிவபாலசிங்கம் வாகீசனுக்கு இலக்கியத்துறைக்கும், தங்கராசா நிஸாந்தனுக்கு அறிவிப்புத்துறைக்கும், சின்னப்பு சின்னத்துரைக்கு நாட்டுக்கூத்துத்துறைக்கும் பண்டாரவன்னியன் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை வழங்கி வருவதுடன், ஒடுக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுத்து வருவதுடன் , நெருக்கடியான சூழலிலும் ஊடக பணியினை முன்னெடுத்து வரும் சண்முகம் தவசீலனுக்கு ஊடகத்துறைக்கான பண்டாரவன்னியன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் பிரதமவிருந்தனராக கலந்துகொண்ட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் தலைவரும் முன்னைநாள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான நாகலிங்கன் வேதநாயகம் கலந்து கொண்டார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளம்பலம் உமாமகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் சிவபாலன் குணபாலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் உதவிச் செயலாளர் சுரேந்திரன் , ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் சிவசுந்தரம் கணேசபிள்ளை மதத்தலைவர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், வெலிஓயா பிரதேச செயலாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினுடைய உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களால் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துகௌரவிக்கப்படடதோடு நினைவுக்கேடயம், சான்றிதழ் நினைவு பரிசு என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டன.
No comments