Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

குற்றங்களுக்கான வக்காலத்து


கடந்த வியாழக்கிழமை 2024.01.11ஆம் திகதி அன்று வெளியான உதயன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம். 


'காணி நிலம் வேண்டும் பராசக்தி' என்று கனவுகண்ட பாரதி, இன்று யாழ்ப்பாணத்தில் இருந்திருந்தால் 'நல்ல காணி உறுதியுடன் காணிநிலம் வேண்டும்' என்றுதான் பாடியிருப்பார். அந்தளவுக்கு உறுதியில் கூட மோசடி செய்து காணிகள் பரவலாக விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒருவரின் பெயரில் உள்ள காணிகளை இன்னொருவரின் பெயருக்கு மோசடியான முறையில் மாற்றி பின்னர் அதனை அப்பாவிகளின் தலையில் கட்டிவிட்டு தலைமறைவாதல், வெளிநாடுகளில் உள்ளோரின் காணிகளுக்கு கள்ள உறுதி செய்து விற்பனை செய்தல், அரச காணிகளை தனியார் காணிகள் போல காட்டி அதற்கும் உறுதி தயாரித்து விற்றல், வெள்ளம் கடல்போல தேங்கக்கூடிய பகுதிகளையெல்லாம் ஒப்பனை செய்து நல்லகாணி என ஏமாற்றுதல் என்றெல்லாம் காணி மோசடிகளின் வகைகள் நீண்டுகொண்டே செல்கின்றன.

இந்த மோசடிகளில் சிக்கி,கோடிக்கணக்கில் பலர் தங்கள் பணத்தைத் தொலைத்திருக்கிறார்கள். காணி மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கென விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்படுமளவுக்கு, நாளொரு காணியும் பொழுதொரு மோசடியுமாக இந்த நிலைமை தொடர்கின்றது.

இவ்வாறான காணிமோசடிகளில் தனிநபரோ அல்லது நிறுவனமோ மாத்திரம் சம்பந்தப்படுவதில்லை. இந்த மோசடிக் குழு மிகப் பரவலான, நுண்ணிய கண்ணிகளால் பின்னப்பட்ட வலைப்பின்னலைக் கொண்டது. குறிப்பாக கள்ள உறுதி தயாரித்தல், வெற்றுக் காணிகளை இனங்காணல், கையழுத்தைப் போலியாகப் போடுதல், தனியாரின் காணிகளோடு அருகில் இருக்கும் அரசகாணியையும் சேர்த்து உறுதிக்குள் உள்ளடக்குதல் என்று மிகமுக்கியமான பங்களிப்பை இந்தமோசடியில் செய்வது நொத்தாரிஸுகள்தான்.

அதுவும் நொத்தாரிஸுப் பணியைச் செய்யும் சில குறிப்பிட்ட சட்டத்தரணிகளே இந்தக் காணி மோசடிகளின் மூளைகளாகவும் தொழிற்படுகின்றனர். சட்டத்தின் ஓட்டைகள் எவையெனக் கண்டறிந்து, அதற்கேற்ற வகையில் இலகுவில் எவராலும் இனங்காணவோ, வழக்குத்தொடுக்கவோ முடியாத ஏற்பாடுகளை உறுதியில் உள்ளடக்குவதில் இந்தச் சட்டத்தரணிகள் கில்லாடிகள். பல வழக்குகளில் சட்டத்தரணிகள் மீதுதான் முதன்மையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சில சட்டத்தரணிகள் காணிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலரோ தாம் கைதாவதில் இருந்து தப்பிக்க முன்பிணையெடுத்து தப்பிக்க முயல்கின்றனர்.

இத்தகையதொரு சூழமைவில்தான், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம், சட்டத்தரணிகள் எதிர்நோக்கும் சில விடயங்களை முறையிட்டிருக்கிறது சட்டத்தரணிகள் குழுவொன்று. அவ்வாறு முறையிடப்பட்ட விடயங்களுள்,காணிமோசடி தொடர்பில் உறுதிகள் தொடர்பான போதிய அறிவின்மை காரணமாகப் பொலிஸார் தவறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். சட்டத்தரணிகளைக் கண்ணியமற்ற, அவகாசம் எதுவுமற்ற வகையிலே பொலிஸார் கைது செய்கின்றனர்; என்பதுவும் முக்கியமானது.

எத்தனையோ பிரச்சினைகள் நாட்டில் இருக்க, இந்தச் சட்டத்தரணிகள்குழு ஒரு மோசடிக்கும்பலுக்கு வக்காலத்து வாங்கும் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைப்பதென்பது எவ்வளவு அபத்தமானது.காணிமோசடி என்பது இயல்பாக நடக்கும் விடயமல்ல. இதுவொரு திட்டமிட்ட குற்றச்செயல். அந்தக் குற்றங்களில் ஈடுபடாமல் தங்கள் கைகளை சட்டத்தரணிகள் சுத்தமாக வைத்திருந்தால், ஏன் பொலிஸார் அவகாசம் இல்லாமல் கைது செய்யப்போகின்றனர்? ஏன் கண்ணியமில்லாமல் நடக்கப்போகின்றனர்? அவகாசம் கொடுத்தால், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மோசடிகளை அவர்கள் திசைதிருப்பவும் கூடும் என்பதாலேயே பொலிஸார்.மின்னாமல் முழங்காமல் திடீரென இத்தகைய மோசடிச் சட்டத்தரணிகளைக் கைதுசெய்கின்றனர். சட்டத்தரணிகள்தவறு, மோசடிகளைச் செய்யாமல் கண்காணித்தாலேயே, அவர்களின் கண்ணியமும், மேன்மையும் குன்றாமல் இருக்கும்.

அதைவிடுத்து, மோசடிக்காரர்களுக்காக ஜனாதிபதியிடம் மோசடி முறையிடுவதெல்லாம் நீதியான காரியமல்ல.ஈடுபடுவது மாத்திரம் குற்றமல்ல, அதற்குத் துணையாக, அரணாக நிற்பதும் குற்றமே.


நன்றி :- உதயன்.

No comments