யாழ்ப்பாண வர்த்தக சந்தையை குழப்பும் விதமாக யாழ்.மாநகர சபை தொழிற்பட்டு வருகிறது, அது தொடர்பில் ஆளுநருக்கு தெரியப்படுத்தி உள்ளோம். ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கா விடின் அடுத்து வரும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வர்த்தக சந்தையை நடத்த மாட்டோம் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் கே. விக்னேஷ் தெரிவித்தார்.
வர்த்தக சந்தை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
14ஆவது யாழ்ப்பாண வர்த்தக சந்தை நாளைய தினம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில், யாழ். முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மூன்று தினங்களும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் நடைபெறும்.
யாழ்ப்பாணம் வர்த்தக தொழில்த்துறை மன்றத்துடன் இணைந்து, வரையறுக்கப்பட்ட இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டை சேவைகள் நிறுவனத்தினால் குறித்த வர்த்தக சந்தை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
வட பகுதியில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் நன்மைக்காக இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்தோம். இம்முறை 14ஆவது தடவையாகவும் நடத்தவுள்ளோம். இதன் மூலம் வடக்கு தொழில் முயற்சியாளர்களுக்கு உறுதுணையாக இருந்தோம்.
இந்த ஆண்டும் 300 க்கும் மேற்பட்ட காட்சி கூடங்களை அமைத்துள்ளோம். 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை எதிர்பார்க்கிறோம்.
இந்த கண்காட்சி ஒரு களியாட்ட நிகழ்வாக இருக்காது. இது தொழில் முயற்சியாளர்களுக்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.
அதேவேளை மாவட்ட செயலர் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும், தொழில் திணைக்களத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 சிறு முயற்சியாளர்களுக்கும் இலவசமாக காட்சி கூடங்களை வழங்கியுள்ளோம் என்றார்.
No comments