எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம் என "டக் டிக் டோஸ்" திரைப்பட இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னோட்டம்
ஈழத்தில் உருவாகியுள்ள "டக் டிக் டோஸ்" திரைப்படத்தின் முன்னோட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது.
வெளியீட்டு நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே , இயக்குனர் அவ்வாறு தெரிவித்தார்.
எமக்கான கதைக்களத்துடன் "மில்லர்" எனும் படத்தை எடுக்க இருந்தோம். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் முடிந்து , படப்பிடிப்புகள் ஆரம்பமான நிலையில் ,ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதாக இருந்து, இறுதியில் அந்த நிறுவனம் கைவிட்டு விட்டது.
"புத்தி கெட்ட மனிதர் எல்லாம்" எனும் வெற்றி படத்தை கொடுத்த எமது குழு இரண்டு வருடங்களாக படம் செய்யாது இருக்க கூடாது என்பதாலும் , எமது குழு சோர்ந்து விட கூடாது என்பதாலும், " டக் டிக் டோஸ்" என்ற படத்தை எடுக்க முடிவொடுத்தோம். தற்போது பட பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதமளவில் படத்தை வெளியீடு செய்ய முடிவெடுத்துள்ளோம்.
எங்கள் மண்ணின் கதைகள், நாங்க சொல்ல வேண்டிய கதைகள் நிறையவே இருக்கிறது. எங்கள் கதைகளை நாங்கள் சொல்ல வேண்டிய கதைகளை எங்கள் மண்ணில் இருந்து சொல்லும் போதும் எமக்கு ஆபத்துக்கள் சூழலாம்.
ஆபத்தான சூழலில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்ள வேண்டுமாயின் , நாம் யார் என்பதை உலகிற்கு சொல்ல வேண்டும். அதன் பின்னர் எங்கள் கதைகளை பேசுவோம்.
எங்கள் கதைகளை செல்லும் போது அது நிறைய பேரை சென்றடைய வேண்டும். அதற்காக நாம் எமக்கான பார்வையாளர்களை கட்டியெழுப்ப வேண்டும்.
அதனால் தற்போது நாம் இலங்கையை தாண்டியும் எமக்கான பார்வையாளர்களை கட்டியெழுப்பிக் கொண்டு இருக்கிறோம்.
தற்போது நாம் உருவாக்கியுள்ள "டக் டிக் டோஸ் " திரைப்படத்தை ஒரு மாதத்தில் இந்த படத்தை திரையிட்டு முடிக்க திட்மிட்டுள்ளோம். எமது திரையிடல் கால பகுதி ஒரு மாதத்திற்குள் இருக்க வேண்டும். பல மாதங்களாக பல இடங்களுக்கு சென்று படத்தை திரையிட இம்முறை நாம் திட்ட மிடவில்லை. ஒரு மாத காலப்பகுதிக்குள் சகல இடங்களிலும் படத்தை திரையிட முயற்சி எடுத்துள்ளோம்.
இந்த படத்தின் மூலம், பார்வையாளர்களை கட்டியெழுப்பி விடுவோம் என நம்புகிறோம். அதன் பின்னர் எமக்கான கதைகள் எங்கள் கதைகளை சொல்லுவோம். அது பல இடங்களை சென்றடையும்.
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள " மில்லர்" படத்தின் பணிகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டுளோம் அது எங்கள் கதைகளை பேசும் படமாக இருக்கும். அதற்கான தயாரிப்பாளர்களை எதிர்பார்த்துள்ளோம். எங்கள் கதைகளை வெளிக்கொணர விரும்பும் தயாரிப்பாளர் கிடைத்தால் எம் கதை பேசும் மில்லர் படத்தின் பணிகளை மீள ஆரம்பிப்போம் என தெரிவித்தார்.
No comments