மாணிக்க கற்களை வாங்கி , அதற்கு உரிய பணத்தினை வழங்காது மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 15 மாணிக்க கற்களை வாங்கி விட்டு அதற்கு உரிய பணமான 02 கோடியே 87 இலட்சத்து , 50 ஆயிரம் ரூபாய்க்கு காசோலையை வழங்கியுள்ளனர்.
அந்த காசோலையில் குறிப்பிட்ட திகதிக்கு வங்கியில் வைப்பிலிட்ட போது , காசோலைக்கு உரிய கணக்கு இலக்கத்தில் பணம் இல்லாது காசோலை திரும்பியுள்ளது.
அது தொடர்பில் மாணிக்க கற்களை விற்றவர் , காசோலை மோசடி மற்றும் நம்பிக்கை மோசடி என குற்ற புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , நேற்றைய தினம் கொழும்பில் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 03 பெண்கள் உள்ளிட்ட ஐவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தமது பாதுகாப்பில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments