யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் கட்டுமரத்தில் மீன் பிடியில் ஈடுபட்டு இருந்த கடற்தொழிலாளரின் கட்டுமரத்தை இனம் தெரியாத நபர்களின் படகு மோதி விபத்தினை ஏற்படுத்தியதில் கடற்தொழிலாளி உயிரிழந்துள்ளார். மருதங்கேணியை சேர்ந்த மாரிமுத்து முத்துசாமி (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை தனது கட்டுமரத்தில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற வேளை அவரது கட்டுமரத்தை இனம் தெரியாத நபர்களின் படகு மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் கட்டுமரம் சேதங்களுடன் கரையொதுங்கி இருந்தது. கட்டுமரத்தில் தொழிலுக்கு சென்ற தொழிலாளியை காணாததால் , அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மருதங்கேணி கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியது.
சடலத்தின் முகத்தில் காயங்கள் காணப்பட்டமையால் , கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் தடயவியல் பொலிசாரை , அழைத்து தடயங்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பொலிஸாருக்கு பணித்தார்.
அத்துடன் சடலத்தை மீட்டு , கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்.
No comments