புங்குடுதீவு மாணவி கொலை குற்றவாளியான மரண தண்டனை கைதியொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பூபாலசிங்கம் தவக்குமார் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மரண தண்டனை கைதியான குறித்த நபர் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் , சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் எனவும் , சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் 7 பேருக்கு எதிரான குற்றங்கள் நிருபிக்கப்பட்டத்தை அடுத்து ஏழு பேருக்கும் மரண தண்டனை விதித்தும் , 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்தும் தீர்ப்பாயம் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தது.
அதனை தொடர்ந்து குற்றவாளிகள் கண்டி போகம்பரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதேவேளை தமக்கு எதிரான தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் மேன் முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments