வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பயிற்சிகளுக்கு மாத்திரம் 4 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் செயல்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களை அடிப்படையாக கொண்டு குறித்த தகவல் வெளிக்கொணரப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் பல செயற்றிட்டங்களுக்காக 9 பில்லியன் ரூபாய் கடந்த வருடம் செலவிடப்பட்டுள்ளது.
இதில் பயிற்சிகளுக்கு 4 பில்லியன் ரூபாவும் கன்னிவெடி அகற்றலுக்கு 3 பில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.
கன்னி வெடி அகற்றலுக்கான செலவு என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால் பயிற்சிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை செலவு செயயும்போது அதில் பங்கேற்றவர்கள் பயிற்சியுடன் தொடர்புடைய ஏதாவது தொழில் வாய்ப்புக்களை செய்கிறார்களா இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
நீங்கள் அளித்த பயிற்சிகளையும் பயிற்சியில் பங்கேற்றவர்களின் விபரங்களையும் எமக்கு தாருங்கள். இதன்மூலம் பயிற்சிகளில் பங்கேற்றவர்கள் தொழில் வாய்ப்பு இல்லாது இருந்தால் அவர்களை ஏதாவது வகையில் அரச துறையுடன் இணைந்து செயற்படும் வகையிலோ அல்லது வங்கி கடனை பெற்று சுயதொழிலை செய்வதற்கோ வழி செய்யமுடியுமா என அரச சார்பற்ற நிறுவனங்களிடம் கோரியுள்ளேன் என்றார்.
No comments