பல மாதங்களாக ஒழுங்கமைக்கப்பட்ட கால்நடை திருட்டில் ஈடுபட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட 7 பேரை போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பிலியந்தலை பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் நாட்டின் பல பகுதிகளில் சுமார் 50 மாடுகளை இந்தக் குழுவினர் திருடிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பிலியந்தலை பிரதேசத்தில் மாடு திருட்டில் ஈடுபட்டும் வேன் ஒன்று உலாவுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலியந்தலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி மொரட்டுவை வீதியில் தெனிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான வேனை பொலிஸ் அதிகாரிகள் வழிமறித்தனர்.
இதன்போது அந்த வேனில் இருந்து 02 கைக்குண்டுகள், 15 கிராம் ஐஸ் போதைப்பொருள், மாடுகளை அறுப்பதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாள்கள், மன்னா கத்தி, பொல்லு, கயிறுகள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி குறித்த வாகனத்தில் இருந்த 05 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இராணுவ விசேட அதிரடிபடையில் இருந்து ஓய்வுபெற்ற ராணுவ சிப்பாய் ஒருவர் தலைமையில் மாடு கடத்தல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த வருடத்தின் கடந்த 5 மாதங்களில் கெஸ்பேவ, பிலியந்தலை, கஹத்துடுவ, பொரலஸ்கமுவ, மொரந்துடுவ, பண்டாரகம மற்றும் ஹிரண ஆகிய 07 பொலிஸ் பிரிவுகளில் சுமார் 50 மாடுகள் திருடப்பட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
இவ்வாறு திருடப்பட்ட மாடுகள், வத்தளை, மாபோல மற்றும் காலி பிரதேசங்களில் உள்ள இறைச்சி கூடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகைக்கு தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட போது, மற்றுமொரு கைக்குண்டு, 05 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பல போலி வாகன இலக்கத் தகடுகளுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ருக்கஹவில நிட்டம்புவ, பண்டாரகம வெல்மின்ன, கொழும்பன்ன மற்றும் கெஸ்பேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகும்.
சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
No comments