Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பொது வேட்பாளருக்கு புளொட் ஆதரவு


ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொண்டுள்ளோம் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவித்துள்ளனர். 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்ப் பொது வேட்பாளர் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு அறிக்கை ஊடாக அறிவித்துள்ளனர். 

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், சமூக வாழ்வின் எதிர்பார்ப்புகளையும், நாளாந்தம் முகம் கொடுத்துவரும் நெருக்கடிகளையும், தென்னிலங்கை அரசியல் சமூகத்தின்  தொடர்ச்சியான ஏமாற்றுத்தனங்களையும் உறுதியாக வெளிப்படுத்தக் கூடிய வகையில்,  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஏனைய அங்கத்துவக் கட்சிகளுடன் இணைந்து ஏற்றுக் கொண்டதோடு அதனை முன்கொண்டு செல்வதற்கான முழு ஆதரவினையும் வெளிப்படுத்தியிருந்தோம்.

அதே நேரத்தில்,  இத் தீர்மானத்தை  ஒரு சில அரசியல் கட்சிகளினதும்,  ஒரு சில சமூக செயற்பாட்டுக் குழுக்களினதும் தீர்மானமாகவன்றி,  தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் அனைத்துத் தரப்பினரதும் ஏகோபித்த கோரிக்கையாக முன்னெடுப்பதன் மூலம்,  தமிழ் மக்களின் அபிலாசைகளை தீர்மானங்களை மிகவும் காத்திரமான முறையில் வலுமிக்கதான முன்னெடுக்க முடியும் என்பதையும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

தமிழ்ப் பொது வேட்பாளர் கோரிக்கை பேசுபொருளாக ஆரம்பித்த காலத்தைவிட இன்றைய காலகட்டத்தில்,  பல்வேறு தரப்பினரது அயராத முயற்சிகளால்,  அக் கோரிக்கையின் ஆதரவுத் தளம் அதிகரித்து வருவதோடு கோரிக்கையின் நியாயத்தன்மையும் பரந்த அளவில் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலைமை மேலும் சிறப்புறவும், தென்னிலங்கையிலும் சர்வதேசத்திலும் அக் கோரிக்கையில் உள்ள நியாயங்களை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தவும், இயன்றளவில் மிகப் பெரும்பான்மையான தமிழ்த் தேசியச் செயற்பாட்டு சக்திகளுடன் இணைந்து முன்கொண்டு செயற்படுவது, தமிழ் மக்களின் எதிர்காலத்துக்கு அவசியமானது என்பதை எமது கட்சியின் மத்தியகுழுவின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக் கொண்டதோடு அதனை முன்கொண்டு செல்வதற்கும், அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments