Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூரான் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அறிவிப்பு


நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஏற்பாடுகள் தொடர்பில் யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார்.

மேற்படி நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா 2024 ஆம் ஆண்டிற்கான புற ஏற்பாடுகள் முதலாவது கலந்துரையாடலானது மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அவர்களின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் பெருந்திருவிழா புற ஏற்பாடுகள் தொடர்பாக பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1. ஆலயச் சூழலில் வீதிப்போக்குவரத்து நடவடிக்கைகள் 07.08.2024 ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 04.09.2024 நள்ளிரவு வரை ஆலய வெளி வீதியின் ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக தடைசெய்யப்பட்டிருக்கும்.

2. பிரதான வீதித்தடைகள் பருத்தித்துறை வீதியில் மாநகர சபைக்கு முன்புறம் அரசடிச்சந்தி, கோயில் வீதியில் சங்கிலியன் வீதி சந்தி, பிராமணக்கட்டு குள வீதிச் சந்தி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும். சுகாதார பாதுகாப்பு தேவைகளிற்கேற்ப மேற்படி வீதித்தடைகளின் அமைவுகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

3. கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டது போல இம்முறையும் மாற்று வீதி ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் வழமைபோல் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு முன்னால் உள்ள குறுக்கு வீதியால் பயணித்து நாவலர் வீதி ஊடாக ஆனைப்பந்திசந்தியை அடைந்து யாழ் நகரை அடைய முடியும். யாழ் நகரில் இருந்து திரும்பும் வாகனங்கள் அதே பாதை ஊடாக பருத்தித்துறை வீதியை அடைய முடியும். விசேட பெருந்திருவிழாக்களின் போது முத்திரைச்சந்தியில் திரும்பி கச்சேரி நல்லூர் வீதி ஊடாக நாவலர் வீதியை அடைந்து பயணிக்க முடியும். கோயில் வீதி வழியாக வரும் வாகனங்கள் சங்கிலியன் வீதியூடாக பருத்தித்துறை வீதியை அடைந்தும், செட்டித்தெரு ஒழுங்கையூடாக பருத்தித்துறை வீதியை அடைந்து பயணிக்க முடியும்.

4. தூக்குக் காவடிகள் வழமை போல் பருத்தித்துறை வீதி வழியாக உள்நுழைந்து ஸ்ரீமுருகன் தண்ணீர் பந்தலில் காவடிகள் இறக்கி டிராக்டர்கள் செட்டித்தெரு வீதியூடாக வெளியேற வேண்டும்.

5. ஆலய வீதிச்சூழலில் வீதித்தடைகளுக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமை போல வாகன அனுமதி அட்டை மாநகர சபையால் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிரந்தர வியாபாரிகள் பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

6. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது.

7. ஆலய வெளி வீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது.

8. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பொலித்தீன் பாவனை முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.

9. உற்சவ காலங்களில் ஆலய வெளி வீதி சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

10. உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்.

11. உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுள் திருவுருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.

12. ஆலயச் சூழலில் ட்ரோன் (Drone) கமராக்களைப் பயன்படுத்தி காணொளி பதிவு செய்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நடவடிக்கைகளுக்கு அமைவாக நல்லூர் பெருந்திருவிழா நடைபெறுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் மகோற்சவ திருவிழா எதிர்வரும் 09ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்கள் நடைபெறும். 


No comments