Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பழிதீர்க்கும் போக்கிலையா அரசியல் கைதிகளை தடுத்து வைத்துள்ளார்கள் ?


அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றதா? என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது 

தேசிய சிறைக்கைதிகள் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளனர். 

குறித்த ஊடக சந்திப்பில் தெரிவிக்கையில், 

ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில், இன்று 116 ஆவது தேசிய சிறைக் கைதிகள் தின நிகழ்வுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருகக்கூடிய இடவசதியினைக் கொண்ட சிறைக்கூடங்களுக்குள் 24 ஆயிரம் கைதிகளை திணித்து அடைத்து வைத்துக் கொண்டிருக்கின்ற நிலையிலையே சிறைத்துறை இந்த கைதிகள் தின நிகழ்வை மேற்கொண்டு வருகின்றதென்பது  சுட்டிக்காட்டுத்தக்கது. 

இருப்பினும் உணவு, நீர், சுகாதாரம், மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் போதுமற்ற நிலையில் பெயருக்காக கொண்டாடப்படுகின்றதா இந்த தேசிய சிறை கைதிகள் தினம்? என்கின்ற கேள்வி எழுகிறது. 

இத்தனை மோசமான கட்டமைப்பை கொண்டியங்கும் சிறைக்குள்ளேயே சமூகத்தை நேசித்த எமது தமிழ் அரசியல் கைதிகள், 30 ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை கொடூரமானது?

"எமது நாடு, ஜனநாயக நாடு. நாம் கருணை அன்பு மிக்கதொரு பாரம்பரிய சமூக சமயத்தை  சார்ந்தவர்கள். மறப்போம் மன்னிப்போம் என்பது எமது கொள்கையில் ஒரு அங்கம்." என மேடை முழக்கம் செய்கின்ற அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றதா? எனக் கேட்கின்றோம். 

இன்று, தேர்தல் பரப்புரைகளாலும் எண்ணற்ற வாக்குறுதிகளாலும், நாடு நிரம்பித் ததும்பிக் கொண்டிருக்கிறது. ஆனபோதிலும், தமிழினத்தின் பெயரில் மூன்று தசாப்த காலங்களாக சிறையில் கொடுமை அனுபவித்து வரும் எமது தமிழ் அரசியல் கைதிகளின் நரக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியின் எல்லை இதுவரை தெரியவில்லை. 

உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டினுடைய சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறையும் அதற்கு ஒப்ப இயங்குகின்ற சிறை த்துறையும் அரச இயந்திரத்தின் முக்கிய இரு பிரிவுகளாகும். 

இவைகள், குற்றங் காணும் குடிமக்களை  சீர்திருத்தி, குறிப்பிட்டதொரு காலத்துக்குள் மீண்டும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொறுப்புக்குரிய நிறுவனங்களாகும்.

 ஆனாலும், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயத்திலே அரசும் அதன் இயந்திரங்களும் மாற்றான் தாய் மனப்போக்குடன் நடந்து கொள்வதன் நோக்கம் என்ன?

 காலம் காலமாக கதிரையேறும் சிங்கள ஆட்சி அதிகாரங்கள், தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சூரையாடும் கலாச்சாரத்திற்கு இனிமேலாவது முற்றுப்புள்ளியிட வேண்டும். மக்களினதும் சர்வதேசத்தினதும் பார்வைக் கோணங்களை திசை மாற்றும் கைங்கரியத்தை கைவிட வேண்டும். 

நிச்சயமாக இதற்குமேலும், கால வீணடிப்புச் செய்யாது தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய அவசர அடிப்படை விடயங்களுக்கு தீர்வினைக் கூற வேண்டும்.  

குறிப்பாக, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில், அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டை பொது வெளியில் தெரிவிக்க வேண்டும் என்பதை, 'குரலற்றவர்களின் குரல்' மனிதநேய அமைப்பினராகிய நாம், இந்த ஆண்டு தேசிய சிறைக் கைதிகள் தின பகீரங்க கோரிக்கையாக முன்வைக்கின்றோம். 

அவ்வாறில்லையேல், இந்த நாட்டினுடைய ஆட்சி அதிகாரங்களுக்கும் அதற்குத் துணை செய்யும் குடி மக்களுக்கும், தமிழினத்தின் சாபக் கேடென்பது தவிர்த்தொதுக்க முடியாத ஒரு காலத்தின் நியதியாகும் என்பதை நினைவூட்டக் கடமைப்படுகின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

குறித்த ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் , அரசியல் கைதியான பார்த்தீபனின் சகோதரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 


   

No comments