Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் - தமிழ் பொதுக்கட்டமைப்பிடம் சுமந்திரன் கோரிக்கை


நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,

இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்.

 2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டும் என்ற எண்ணக்கரு உதயமான பொழுதிலிருந்தே அதனை மிகக் கடுமையாக நான் எதிர்த்தது அனைவரும் அறிந்ததே. அவ்வெதிர்ப்புக்கான காரணங்கள் பல தருணங்களிலே வெளிப்படுத்தப்பட்டிருந்தாலும் இச் சமயத்திலே மீண்டும் அவற்றை நினைவுபடுத்துவது நல்லது என்று நினைக்கின்றேன்.

1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது.

2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன?

3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும்.

4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது.

6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும்.

இலங்கை தமிழரசுக்கட்சி எத்தருணத்திலும் தமிழ்ப் போதுவேட்பாளரை நிறுத்துகிற முயற்சியில் பங்கெடுக்கவில்லை. மாறாக பிரதான வேட்பாளர்கள் மூவரோடும் கட்சியின் முடிவின்படி உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். எமது கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரைத் தமிழ்ப் பொது வேட்பாளராக நிறுத்திய போதுஅவருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்து, அவருக்கு சார்பாக பிரச்சாரம் செய்யும் எமதுகட்சி உறுப்பினர்களை எச்சரித்தோம். பிரதான வேட்பாளர்கள் மூவரினதும் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்தவுடனேயே எமது மத்திய செயற்குழு கூடி அவற்றை ஆராய்ந்தது. இந்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்ந்த ஐந்தாவது கூட்டம் 01.09.2024 அன்று வவுனியாவில் கூடி பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றினர்.

1. தமிழ்ப் பொது வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திரு. பா. அரியநேத்திரனுக்கு நாம் ஆதரவளிப்பதில்லை.

2. தேர்தலிலிருந்து விலகிக் கொள்ளுமாறு திரு. அரியநேத்திரனைக் கோருவது.

3. ஜனாதிபதி தேர்தல் 2024 இல் இலங்கை தமிழரசுக்கட்சி திரு. சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பது.

எமது கோரிக்கைக்கு அமைவாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்கள் வாக்களித்ததன் காரணமாக ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் திரு. சஜித் பிரேமதாச வெற்றி பெற்றிருக்கின்றார். வடக்கு கிழக்கிலே அண்ணளவாக 80 % இனர் நாம் அடையாளம் கண்ட மூன்றுபிரதான வேட்பாளர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். இதுஎமது கட்சி எடுத்த நிலைப்பாட்டிற்கான மாபெரும் அங்கீகாரம் 

மாறாக திரு.அரியநேத்திரனுக்கு வடக்குகிழக்கில் 14 % இற்கு குறைவாகவே வாக்குகள்கிடைத்துள்ளன. மிகக் குறைவான அளவு வாக்குகளைப்பெற்றதன் மூலமும், பிரதான தமிழ்க் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆதரவு மறுக்கப்பட்ட நிலையிலும், திரு.அரியநேத்திரனின் படுதோல்வி தமிழ் மக்களின் தோல்வியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பியிருக்கின்றது. 

1982 ஆம் ஆண்டு திரு.குமார் பொன்னம்பலம் 2.67% வாக்குகளைப் பெற்றிருந்தார். வெறும் 1.69% வாக்குகளையே பெற்றதன் மூலம் திரு. அரியநேத்திரன் தமிழ் மக்களால் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பது நிரூபணமாகியிருக்கின்றது. இந்தத் தடவை மக்களது மதி நுட்பத்தால் இந்தப் பெரும் அபாயத்திலிருந்து நாம் தப்பித்துக்கொண்டுள்ளோம். 

இனிமேலும் இவ்விதமான விபரீத விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று தமிழ்ப் பொதுக் கட்டமைப்பினர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரிடம் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன். - என்றுள்ளது.

No comments