Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ். தவிர்ந்த எந்த நீதிமன்றிலும் முற்படத் தயார் - கோட்டாபய


லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தவிர்ந்த எந்தவொரு நீதிமன்றிலும் சாட்சியமளிக்கத் தான் தயாராக இருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

தனது இந்த நிலைப்பாட்டை சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மூலமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளார். 

மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி  காணாமல் ஆக்கப்பட்டனர். 

இவர்களை அரச புலனாய்வுப் பிரிவினரும் இராணுவத்தினருமே கடத்திச் சென்றிருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் லலித், குகனின் உறவினர்கள் ஆள்கொணர்வு மனு  ஒன்றைக் கடந்த  2012ஆம் ஆண்டு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். 

இதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் 19ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆரம்பமானது. 

எனினும், இந்த  வழக்கில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த அப்போதைய பாதுகாப்பு செயலரான கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி சாட்சியமளிப்பதைத் தவிர்த்து வந்திருந்தார்.

இதனிடையே, தாக்கல் செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைக்க முடியாது என்ற உத்தரவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவைச் சவாலுக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இதன்போதே, கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைப்பாட்டை அவரின் சட்டத்தரணி உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.

No comments