Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்!


 சர்வதேச நாணய நிதியத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு மற்றும் அதன் சிரேஷ்ட தூதுக்குழு தலைவர்  பீட்டர் ப்ரூவர் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய  அமைச்சர்கள் குழுவை நேற்றைய தினம் பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர்.  

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது அரசாங்கம் பெற்ற மக்கள் ஆணையுடன் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) ஒத்துழைப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர், தீர்மானகரமான தேர்தல் வெற்றிக்கு ஜனாதிபதி மற்றும் அணியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் வெற்றியானது தற்போதுள்ள ஆட்சியின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் தங்கியுள்ளது என வலியுறுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மக்கள் ஆணைக்கு அமைய செயற்படுவது தமது ஆட்சியின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினார்.

மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்தார். தனது தலைமையின் கீழ், சிறுவர் வறுமை மற்றும் போசாக்கின்மை போன்ற அத்தியாவசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும்  சமூக சேவைகளுக்கான ஒதுக்கீடுகள் திறம்பட பயன்படுத்தப்படுவதையும் உறுதிசெய்தார்.

கடந்த காலங்களில் சமூக சேவை செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள் முழுமையாக பயன்படுத்தப் படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டதுடன், வளங்களை வினைத்திறனான ஒதுக்கீடு மற்றும் பாவனையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர்.

நாட்டை ஆட்சி செய்வது மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவது குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது. மக்கள் வழங்கிய ஆணையின் முக்கிய அம்சமான ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தானும் தனது அரசாங்கமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

அந்த செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில், சட்டமியற்றும் மற்றும் ஏனைய நிறுவன ரீதியான கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு தமது அரசாங்கம் கடுமையான  ஒழுங்குவிதிகளை அமுல்படுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதிய குழுவிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பில் ஒரு சாதகமான முன்னேற்றத்தைக் குறிப்பதோடு  அதன் ஊடாக பொருளாதார மீட்சி மற்றும் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான அடித்தளத்தை அமைக்கிறது.

இக்கலந்துரையாடலில் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் நிதியமைச்சின் பிரதிநிதிகளும் இணைந்து கொண்டனர்.

No comments