யாழ்ப்பாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 634 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் தொடரும் மழை காரணமாக மாவட்டத்தில் இன்றைய தினம் மதியம் வரையிலான கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் 2ஆயிரத்து 855 குடும்பங்களை சேர்ந்த 09 ஆயிரத்து 854 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 46 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
நல்லூர் , சாவகச்சேரி , நெடுந்தீவு மற்றும் சங்கானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் 12 பாதுகாப்பு இடத்தங்கள் முகாம்களில் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முகாம்களில் 191 குடும்பங்களை சேர்ந்த 634 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிர்வரும் மூன்று நாட்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு அப்பகுதி பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு , நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ள மக்கள் பிரதேச செயலர்களுக்கு அறிவித்து அவரின் சிபாரிசில் உலர் உணவு பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேங்கி நிற்கும் வெள்ளங்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் , யாழ் . மாநகர சபையும் , பிரதேச சபைகளும் ஈடுபட்டுள்ளனர். அதற்காக அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
கடல் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் , நிலத்தில் இருந்து கடலை நோக்கி செல்லும் நீரின் வேகம் குறைவடைந்துள்ளது. கடல் மட்டம் குறையும் போதே நீர் வழித்தோடும் அது வரையில் மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்
இனிவரும் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்பட கூடிய அபாயம் உள்ளது. அதனால் சுகாதாரம் சார்த்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளன. அது தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையுடன் இணைந்து செயற்பட உள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
No comments