ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. சம்பவம் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய குழு உறுப்பினரும், யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
விபத்து சம்பவம் ஒன்றினை அடுத்து சுன்னாகம் பொலிஸார் நடந்து கொண்ட விதம் குறித்தும் , இளந்தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிஸாரால் இளந்தாயொருவரும், அவரது பச்சிளம் குழந்தையும் கணவனும் நேற்றிரவு தாக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் நான் கவலையடைவதுடன், இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தாக்குதல் நடத்தியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டி நிற்கின்றேன்.
இந்த சம்பவம் தொடர்பில் பலரும் ஆளும் அரசாங்கத்தை கண்டிப்பதை காண முடிகின்றது. ஒரு சில அதிகாரிகள் விடும் தவறுகளுக்கு அரசாங்கத்தை குறை கூறி பயனில்லை. இப்படியான சில சம்பவங்கள் எமது பொதுஜன பெரமுன அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன. அதன்போது பிழை விடும் அதிகாரிகள் மீது சுமத்த வேண்டிய குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது சுமத்தினார்கள்.
நேற்றைய தாக்குதல் சம்பவத்தில் குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாக இருக்கின்றது. என குறிப்பிட்டுள்ளார்.







No comments