சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், வர்த்தக சங்கத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
சாவகச்சேரி நகர சபையில் மக்கள் பிரதிநிதிகள் இருந்த காலத்தில் கடைகளின் உரிமங்கள் வர்த்தகர்களுக்கு மாற்றி வழங்கப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், சபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்த பின்னர் அந்த ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் உடனடியாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் செ.பிரணவநாதனை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடினார்.
வர்த்தகர்களின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்ட விவகாரத்தை கருத்திலெடுத்து அதை உரிய முறையில சீர்செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை வழங்கினார்.
மேலும் விசேட பண்டிகை தினங்களில் சாவகச்சேரி நகரத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் அல்லாத வேறிடங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கு நடைபாதை வியாபாரத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும், நகர சபையால் அமைக்கப்பட்டுள்ள கடைகளை, ஏற்கனவே வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்குவது தொடர்பிலும் வர்த்தக சங்கத்தினர் கோரிக்கைகள் முன்வைத்தனர்.
அது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்தார்.
No comments