Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி யாழில் பணம் பறித்தவர்கள் கண்டியில் கைது


வருமான வரி பரிசோதகர்கள் என தம்மை அடையாளப்படுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணத்தினை பறித்து சேர்ந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபரை 5 இலட்ச ரூபாய் பணத்துடன் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர். 

கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் வாகன சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள நகை கடை ஒன்றினுள் சென்று தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய கும்பல் ஒன்று கடை உரிமையாளரிடம் இருந்து 30 இலட்ச ரூபாய் பணத்தினை பறித்துக்கொண்டு தப்பி சென்றது.

நகை கடைக்குள் மூவர் அடங்கிய கும்பல் ஒன்று சிவில் உடையில் சென்று , தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என கூறி கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

விசாரணைகளை மேற்கொள்ள முதல் ,கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் எடுத்துக்கொண்டும் , கடையின் உரிமையாளர் மற்றும் , கடை ஊழியர்களின் தொலைபேசிகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர். 

பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும் , கணக்கில் காட்டாத பெருமளவான பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலையே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் 

அதனை தொடர்ந்து கடையினை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் காணப்பட்ட நகைகள், கடையில் இருந்த 30 இலட்ச ரூபாய் பணம்  என்பவற்றை தாம் எடுத்து செல்வதாகவும் அவற்றினை தமது அலுவலகத்திற்கு வந்து உரிய பற்று சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றினை எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். 

நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகம் கொண்டு வருவதாக கடை உரிமையாளர் கூறி அவற்றை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்த போது , நகைகளை நீங்கள் கொண்டு வந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள் , பணத்தினை நாம் எடுத்து செல்கின்றோம் என கூறி பணத்தினை எடுத்து சென்றுள்ளனர். 

அவர்கள் பணத்தை எடுத்து சென்ற பின்னரே , கடை உரிமையாளர் சக கடை உரிமையாளர்களிடம் கூறிய போதே , வருமான வரி பரிசோதகர்கள் என கூறி வந்த கும்பல் மோசடி கும்பல் என தெரிய வந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments