திஸ்ஸ விகாரையின் பின்னணியில் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் உள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இனவாத நடவடிக்கைகளில் இராணுவம் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராகவே அவர்கள் போரை முன்னெடுத்தார்கள். அதில் இருந்து அவர்கள் இன்னமும் வெளியே வரவில்லை. தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு எதிராகவே இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரை கட்டுவதில் இராணுவத்தினரே ஈடுபட்டு வருகின்றனர். அப்போதிருந்த இராணுவ தளபதியால் தனியார் காணியில் அடிக்கல் நாட்டும் போது , அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதற்கு எதிராக தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.
அவற்றையெல்லாம் மீறியே இராணுவத்தினரால் சட்டவிரோதமான முறையில் விகாரை கட்டி முடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது , திஸ்ஸ விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியையும் விகாரைக்கு வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலரிடம் அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் கடிதம் மூலம் கோரியுள்ளது.
அதன் தலைவராக கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ள, சந்திரா நிமல் வாக்கிஸ்கா என்பவர் யார் என தேடினால் , அவர் தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளராகவும் , பிரதி பொலிஸ் மா அதிபராகவும் கடமையாற்றியவர் என தெரிகிறது
இந்த சட்டவிரோத விகாரையின் பின்னணிகள் தெளிவாக தெரிகிறது.
இந்த அரசாங்கம் இனவாத கொள்கைகளை பின் பெற போவதில்லை என்றும் , சட்டத்தின் ஆட்சியையே நிலை நாட்டுவோம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள்.
எனவே தனியார் காணியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை விடயத்தை எப்படி கையாள போகின்றார்கள் என்பதை பொறுத்தே , இந்த அரசாங்கம் இனவாதமுடையதா ? இல்லையா என்பது புலப்படும் என மேலும் தெரிவித்தார்.
No comments