பாதுகாப்புத் தரப்பினர் முன்னெடுத்துள்ள வர்த்தக நடவடிக்கைகளால் சிவில் சமூகத்தினருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலருடன் கலந்துரையாடியதாக ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ ஆளுனரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா.வின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ தலைமையிலான குழு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான வடக்கு மாகாண அலுவலர்களை ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சந்தித்துக் கலந்துரையாடினர்.
அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வடக்கைச் சேர்ந்த பல தரப்பட்டவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். முன்னுரிமை அடிப்படையில் வேலைத் திட்டங்கள் அமையும்.
மக்களுக்கு அரசாங்கம் வாக்குறுதியளித்த பல விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. வட பகுதி மக்கள் முதல் தடவையாக அரசாங்கத்துக்கு தேர்தலில் பெருமளவு ஆதரவு வழங்கியுள்ளனர்.
வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்றார்.
அத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் யாழ்ப்பாணப் பயணம் தொடர்பிலும் அவர் இதன்போது வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பிலும் குறிப்பாக மக்களின் காணிகள் மக்களுக்கே வழங்கப்படும் என்ற உறுதிமொழி தொடர்பிலும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி பிரஸ்தாபித்தார்.
அதேவேளை , போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடக்கின்ற நிலையிலும் கிராமிய அபிவிருத்தியில் இன்னும் பல மைல் தூரம் பயணிக்க வேண்டியிருப்பதைக் குறிப்பிட்ட ஆளுநர், அந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உதவிகளைச் செய்யவேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
அத்துடன், போருக்கு முன்னரான வடக்கின் ஏற்றுமதி நிலைமையையும் தற்போதைய நிலைமையையும் சுட்டிக்காட்டிய ஆளுநர், விவசாயம் மற்றும் மீன்பிடியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் என்பன பிரதேச செயலர்கள் மற்றும் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாடாது தன்னிச்சையாக கடந்தகாலங்களில் வர்த்தமானியில் தமது ஆளுகைப் பிரதேசங்கள் என மக்களின் குடியிருப்பு மற்றும் வயல்காணிகளை வெளியிட்டமையால் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை இன்னமும் தொடர்வதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
No comments