Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

என் மீது சேறு பூச வேண்டாம்


 தையிட்டி விகாரை விவகாரத்தில் தற்போதைய அரசாங்கம் என்மீது சேறுபூசும் நடவடிக்கையை நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவர்களது காணிகள் மீளக்கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

தையிட்டி விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,

அண்மைய நாட்களாக, தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரை தொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் முக்கியமான பேசுபொருளாக அமைந்துள்ளது.

குறிப்பாக, கடந்த இரண்டு மூன்று நாட்களாக தற்பொழுதுள்ள ஆட்சியாளர்கள் சார்ந்த சமூக ஊடகங்களில் நான் கூறியதாக சில தவறான தகவல்கள் பதிவேற்றப்பட்டுள்ளது.

அதாவது "இராணுவம் தம் வசம் வைத்துள்ள காணிகளை விட்டு வெளியேறும் போது கட்டிடங்கள், விகாரைகளை இடித்து அழித்து விட்டு செல்வார்கள்" என்ற கருத்து பரப்பப்படுகிறது.

இப்படியான ஒரு கருத்தை நான் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறுவதற்கான அதிகாரம் எனக்கில்லை. அவர்களின் தரப்பை சார்ந்தவனும் நான் இல்லை. மக்களுடன் இணைந்து மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களின் சார்பாகவே நான் எப்போதும் செயற்பட்டுள்ளேன் என்பதனை ஆணித்தரமாக கூறுகின்றேன்.

அதேநேரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களிற்கு காணிக்கான நட்ட ஈட்டினை வழங்க வேண்டும் என்றும் நான் எந்தச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.

தனியார் காணிகளில் கட்டப்பட்ட தையிட்டி விகாரைக் கட்டிடமானது வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டது.

நான் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக செயற்பட்ட காலத்தில், வலி வடக்கு பிரதேச செயலாளருடன் இணைந்து தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை அமைக்கும் பணியை நிறுத்தும்படி  ஏக மனதாக முடிவு எடுத்து கூறியியிருந்தோம்.

தொடர்ந்து நான் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவராகவும் இணைத்தலைவராக ஆளுநரும் மற்றும் மாவட்ட செயலாளரும் இணைந்து நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் நாங்கள் எல்லோரும் சேர்ந்து தையிட்டியில் சட்ட விரோதமாக கட்டிட அனுமதி இல்லாமல் கட்டப்படும் விகாரையை நிறுத்தும்படி ஏக மனதாக முடிவு எடுத்து கூறியிருந்தோம்.

அக்கூட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர், வலிகாமம் வடக்கு பிரதேச சபை செயலாளர் அவர்களும் மற்றும் ராணுவ அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் பங்குபற்றி இருந்தனர். அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஊடகங்களுக்கும் இந்த விடயங்களும், உண்மைகளும் நன்றாகவே தெரியும்.

மாவட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தங்களது நிர்வாக கட்டமைப்பின் பொருத்தமான திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி நடவடிக்கை எடுக்குமாறும் நான் வலியுறுத்தியிருந்தேன். இது தொடர்பான பதிவுகள் எனது முகப்புத்தகத்தில் உள்ளது.

1982 ம் ஆண்டின் உள்ளுராட்சி சபைகள் சடடத்தின் மூலம் அனுமதி அற்ற கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கான முழு அதிகாரம் பிரதேச சபைக்கு உள்ளது. தையிட்டியில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டும்போது பிரதேச சபை தலைவர், செயலாளர் பொருத்தமான நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தை நாடி தீர்வை காண்பது அவர்களின் சட்ட கோவைக்கு உட்பட்டது.

காணி உரிமையாளர்களும் அவர்களின் சட்டத்தரணி ஊடாக சட்ட நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். சட்ட ஜாம்பவான்களான மக்கள் பிரதிநிதிகளும் இது சார்ந்து ஆர்ப்பாட்டங்களை தாண்டியும் சட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும்.

கடந்த காலத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் குறித்த விகாரைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டத்திலும் நான் கலந்து கொண்டு எனது ஆதரவினை தெரிவித்திருந்தேன்.

ஆகவே தற்போது பகிரப்படும் தவறான தகவல்கள், உண்மையில் என்மீது சேறு பூசும் செயலாகும்.

அதாவது கடந்த 31.01.2025 திகதி மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் அதற்கான தீர்வினை பாதிக்கப்படட மக்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சென்றுவிட்டு இன்று பிரச்சனையை திசை திருப்பி என்மீது சேறுபூசும் செயலை சமூக வலைத்தளங்கள் ஊடாக செய்வது தற்போதைய அரசின் கையாலாகாத செயலையே காட்டுகின்றது. 


இதனை அனுமதிக்க முடியாது. தற்போதைய அரசாங்கம் என்மீது சேறுபூசும் நடவடிக்கையை நிறுத்தி, பாதிக்கப்பட்ட மக்களிற்கு அவர்களது காணிகள் மீளக்கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் தங்களது அரசு மீது மக்கள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் - என்றுள்ளது.

No comments