Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாடசாலை மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர். 




போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்தமைக்காக பாராட்டுகின்றேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். 

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின், பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் விளையாட்டுத் திணைக்களம், சுற்றுலாப் பணியகம் மற்றும் வலி. தெற்கு பிரதேச சபை இணைந்து நடத்திய வடக்கு மாகாண சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டம் - 2025 நிகழ்வு மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. 

 நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றுகையில், 

காலத்துடன் இணைந்து பல மாற்றங்களை நாம் எதிர்கொண்டு வருகின்றோம். பல விளையாட்டு நிகழ்வுகள் அருகிச் செல்கின்றன. பல விளையாட்டுகளை மறந்தே போய்விட்டோம். நடைபெறுகின்ற விளையாட்டு நிகழ்வுகளில்கூட இளையோர் பங்கேற்பும் மிகக் குறைந்துள்ளது. 

பாடசாலை மாணவர்கள், பாடசாலை அதன் பின்னர் தனியார் கல்வி நிறுவனம் என்று தமது நாளைச் செலவிடுகின்றனர். இல்லையேல் வீட்டில் இருந்து அலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். இப்படியிருந்தால் அவர்களால் எப்படி விளையாட்டில் ஈடுபட முடியும்? 

உண்மையில் மிகச் சிறப்பான நிகழ்வை வடக்கு மாகாண கல்வி அமைச்சும், பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஏற்பாடு செய்திருக்கின்றன. தமிழ் - சிங்கள மாணவர்கள், கலைஞர்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தியிருக்கின்றார்கள். மறந்துபோகின்ற எங்கள் பாராம்பரியங்களை நினைவூட்டும் வகையில் இந்தக் கொண்டாட்டத்தை ஒழுங்குபடுத்தியிருப்பது மகிழ்வைத்தருகின்றது. 

எப்போதும் புத்தாண்டு பிறக்கும்போது நாம் சிறப்பாக அந்த ஆண்டு அமையவேண்டும் என்பதற்காக ஆலயங்களில் வழிபாடு செய்வோம். பிறந்திருக்கின்ற சித்திரைப்புத்தாண்டு எமது மாகாணத்தில் அபிவிருத்திகள் நடந்தேறி மக்கள் சந்தோசமாக வாழ்வதற்கு வழிசெய்யவேண்டும். கனவுகளை நிறைவேற்றுகின்ற ஆண்டாக இது அமையவேண்டும் என தெரிவித்தார். 

அதேவேளை  சித்திரைப்புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்ற ஆளுநர் இன்னிய வாத்திய இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டார். 

அத்துடன் தமிழ்ப் பாரம்பரியத்துடனான குடில் மற்றும் சிங்கள பாராம்பரிய குடில்கள் என்பன மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றையும் ஆளுநர் பார்வையிட்டார்.

 அவற்றைத் தொடர்ந்து மைதானத்தில் தமிழ் மற்றும் சிங்கள பாரம்பரிய கலாசார நடன நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் தமிழ்ப் பாரம்பரிய குடிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த 'குந்தில்' இருந்து பார்வையிட்டனர்.

 அதனைத் தொடர்ந்து வேடப் போட்டியையும் பார்வையிட்டு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளையும் ஆளுநர் ஆரம்பித்து வைத்தார். 















No comments