Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிள்ளையானை சந்திக்க ரணிலுக்கு அனுமதி மறுப்பு


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை உறுதிப்படுத்தினார். 

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுடன் தொலைபேசிமூலம் உரையாட அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 9 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

எனினும், குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனவும், தடுப்பு காவலில் உள்ள சந்தேகநபருடன் தொலைபேசியில் உரையாடுவது சட்டவிரோதமானது எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். 

அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்தார். 

சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சட்டத்தரணியாக உதய கம்மன்பில செயற்பட்டதால் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 18 ஆண்டுகளின் பின்னர், கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்ட சிவநேசத்துரை சந்திரகாந்தன் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments