யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ யினால் சுமார் 200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினால் , பலர் தற்காலிகமாக தமது வீடுகளில் இருந்து வெளியேறி நண்பர்கள் , உறவினர்கள் வீடுகளில் நேற்று தஞ்சமடைந்திருந்தனர்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவு சேகரிப்பு நிலையம் காக்கை தீவு பகுதியில் காணப்படுகிறது. அங்கு கழிவுகளை தரம் பிரிக்காது , கொட்டி , பாரிய குப்பை மேடுகளாக அப்பகுதி காணப்படுவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறித்த குப்பை மேடுகளால் காக்கைதீவு , பொம்மைவெளி , நாவாந்துறை , ஆறுகால் மடம் நவாலியின் ஒரு பகுதி போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக குப்பைகள் நிலத்தில் கொட்டப்பட்டு காணப்படுவதால் , அயலூர் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது.அத்துடன் அப்பகுதி குப்பை மேடுகளாக காணப்படுவதால் , மலசல கூட கழிவுகள் , உணவக கழிவு நீர் என்பவற்றை தனியார் நிறுவனங்கள் சில அப்பகுதியில் திருட்டு தனமாக கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால் இலையான்களின் தொல்லைகள் , துர்நாற்றம் போன்றவற்றுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இதனால் குறித்த பகுதியில் இருந்து குப்பை மேட்டை அகற்றுமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேவேளை மாநகர சபையின் குப்பைகள் கொட்டப்படும் , மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி என்பதால் , தமது பிரதேச எல்லைக்குள் குப்பைகளை கொட்ட வேண்டாம் என மானிப்பாய் பிரதேச சபையினரும் நீண்ட காலமாக மாநகர சபையிடம் கூறி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறிப்பிட்ட சில வார கால இடைவெளியில் குப்பை மேட்டில் தீ பற்றுவதும் , பல மணி நேர போராட்டத்தின் மத்தியில் தீ அணைக்கப்படுவதும் , நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது
குறித்த தீயினால் ஏற்படும் புகை மற்றும் துர்நாற்றங்களால் அயலூர்களை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர்
குப்பை மேட்டில் நேற்றைய தினமும் தீ பற்றிக்கொண்டதால் , பிளாஸ்டிக் , பொலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து வெளியேறிய புகை மற்றும் புகை மண்டலம் காரணமாக , அயலூரில் வசித்து வரும் முதியவர்கள் , சுவாச பிரச்சனைகள் உள்ளோர் , சிறுவர்கள் உள்ளிட்ட பலர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் , பலர் தமது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறி , உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்து காலையிலையே வீடு திரும்பி இருந்தனர்.
குப்பை மேட்டில் ஏற்பட்ட தீயினால் எழுந்த புகை மண்டலத்தால் , யாழ்ப்பாணம் - அராலி வீதி ஊடான போக்குவரத்தும் நீண்ட நேரம் பாதிக்கப்பட்டு இருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த குப்பை மேட்டை , மக்கள் குடியிருப்பை அண்டிய பகுதியில் இருந்து அகற்றுமாறு பல்வேறு தரப்பினரிடமும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





.jpeg)



No comments