உங்கள் ஊர்களில் இருந்து உள்ளூராட்சி சபைகளுக்கு செல்வோரே உங்கள் ஊரை அபிவிருத்தி செய்வார்கள், உங்கள் ஊரில் இருந்து உங்கள் ஊரவனை சபைகளுக்கு அனுப்புங்கள் என தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.
தனது வழிகாட்டலில் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபையில் கைக்கோடாரி சின்னத்தில் சுயேச்சை குழுவில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து உரும்பிராய் பகுதிகளில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் , மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே , மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு பல்வேறு உதவி திட்டங்களை இதுவரை காலமும் செய்து வந்தேன். கோப்பாய் பிரதேச சபைக்கு உட்பட்ட செல்வபுரம் , யோகபுரம் , உரும்பிராய் தெற்கு போனற பகுதிகளில் வாழும் மக்களுக்கு பல்வேறு நலன்புரி உதவிகளை வழங்கியுள்ளேன்.
இந்த ஊர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த எந்த அரசியல்வாதிகளோ , அரசியல் கட்சிகளோ முன் வரவில்லை. இவர்களை தமது தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இவற்றினை நேரில் கண்டு வேதனை அடைந்தமையாலையே , எனது வழிகாட்டலில் இந்த கிராமங்களில் வாழும் அந்த மக்களில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்து தேர்தலில் போட்டியிட வைத்துள்ளோம்.
இந்த தேர்தலில் இந்த கிராமத்தில் நான் போட்டியிட முடியாது. இருந்தாலும் என் வழிகாட்டலில் கிராமத்தில் இருந்தே வேட்பாளர்களை களமிறக்கியுள்ளேன்.
நான் எனது சொந்த நிதியில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளேன். இனியும் செய்து கொள்ளுவேன். ஆனால் எமக்கு ஒரு அரசியல் அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில் மிக விரைவாக உங்கள் கிராமத்தை அபிவிருத்தி செய்ய முடியும்.
எனவே உங்கள் ஊரில் இருந்து உங்களவனை தேர்ந்தெடுக்க கைக்கோடாரி சின்னத்தில் போட்டியிடும் எமது சுயேட்சைக்குழுவுக்கு வாக்களியுங்கள் என தெரிவித்தார்
No comments