அரசாங்கத்துக்கு தவறான தகவல்களை வழங்கி சில திணைக்களத்தின் அதிகாரிகள் செயற்படுகின்றனர். அதனால் வடக்கு மாகாணம் பெருமளவு பாதிப்பை இன்றும் எதிர்கொண்டிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், அவுஸ்திரேலியத் தூதுவரிடம் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸூக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில்ம் நேற்றைய செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் ஆளுநர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவுஸ்திரேலியத் தூதுவருக்கு சுட்டிக்காட்டினார்.
மக்களின் மீள்குடியமர்வு மற்றும் காணிகள் விடுவிப்புத் தொடர்பில் தூதுவர் ஆளுநரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆளுநர், மக்களின் மீள்குடியமர்வு இன்னமும் முழுமையடையவில்லை எனவும் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என உறுதியளித்துள்ளதையும் அதற்கு அமைவாக வலி. வடக்கில் சில காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், அரசாங்கத்தால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்படவுள்ளன எனவும் குறிப்பிட்ட ஆளுநர் அதற்கான உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
வடக்கில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் உள்ள மக்களின் விவசாயக் காணிகள், குளங்கள் என்பன வனவளத் திணைக்களம் மற்றும் வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் இங்குள்ள அரச அதிகாரிகளுக்குத் தெரியாமல் கூகுள் வரைபடத்தின் உதவியுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட ஆளுநர், இதனால் அந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை பெரும் சவாலாக உள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், போர் காரணமாக ஆவணங்கள் அழிந்துள்ளமையால் மக்கள் அதனைப் பெற்றுக்கொள்வதில் இடர்களை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார். காணி நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டு இயலுமானவரை காணிப் பிரச்சினை தீர்க்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் வர்த்தமானி தொடர்பில் அவுஸ்திரேலியத் தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்துகொண்டார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தைப்பொறுத்தவரையில் வெளிப்படுத்தல் உறுதி மூலமாக காணி மோசடிச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர் இது தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இளையோரிடத்தில் போதைப்பொருள் பாவனையின் பாதிப்புத் தொடர்பில் தூதுவர் கேட்டறிந்து கொண்டார். வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் குறித்தும் ஆளுநர் இதன்போது தெரியப்படுத்தினார்.
இந்திய மீனவர்களால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்து கொண்டதுடன், தமிழகத்துக்கும் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான தொடர்புகள் தொடர்பிலும் வினவினார்.
இதேவேளை, தமிழகத்திலுள்ள மக்கள் நாடு திரும்பவேண்டும் என்பதே தமது விருப்பம் எனத் தெரிவித்த ஆளுநர், அவ்வாறு நாடு திரும்புவர்களுக்கு தனியானதொரு உதவித் திட்ட நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரையில் நடைபெற்றதுடன், தூதுவருக்கு ஆளுநர் நினைவுச் சின்னத்தையும் வழங்கி வைத்தார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments