3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில், 3 ஆண்டுகளுக்கு முன்னெடுக்கப்படவுள்ள 'க்ரோ' (GROW) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில், இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்ரீபன்ஸ், இலங்கைக்கான நோர்வேயின் பிரதித் தூதுவர் மார்ரைன் அம்டால் பொத்தெம் ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் பங்காளர்களாக வடக்கு மாகாண சபையும், சர்வதேச தொழிலாளர் நிறுவனமும் செயற்படவுள்ளன.
இதன் அறிமுக நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
வறுமை, போசாக்கின்மை, சூழல் மாற்றங்களால் எதிர்நோக்கப்படும் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடிய வகையில் பொருளாதார வலுவூட்டல், சமூக முன்னேற்றம் மற்றும் காலநிலையை எதிர்கொள்ளல் ஆகியன பிரதான செயற்றிட்டமாக கொள்ளப்படும் இந்தத் திட்டத்தின் ஊடாக பெண்கள் மற்றும் வலுக்குறைந்தோர் ஆகியோரின் பங்குபற்றல் உறுதி செய்யப்படுவதுடன் அனைவரையும் உள்வாங்கக் கூடிய வேலைவாய்ப்புக்களை நிர்ணயிப்பதோடு இயற்கையுடன் இணைந்த காலநிலைக்கு முகம்கொடுக்கக்கூடிய விவசாயம் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு சார்ந்த நடவடிக்கைகள் மாகாண சபையின் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் ஊடாக சர்வதேச தொழிலாளர் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுப்பதன் ஊடாக வடக்கு மாகாண மக்களின் வாழ்வில் ஒரு புதிய மாற்றம் ஏற்பட வழிவகுக்கும், என்றார்.
மேலும், கடந்த காலங்களில் அவுஸ்திரேலியா மற்றும் நோர்வே அரசாங்கங்கள் வழங்கிய உதவிகளுக்கும் ஆளுநர் நன்றி தெரிவித்தார்.
ஆளுநரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தூதுவர், நோர்வேயின் பிரதித் தூதுவர், சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் உரையாற்றினர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் எழிலரசி அன்ரன்யோகநாயகம், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், தொழில்துறை திணைக்களப் பணிப்பாளர் வனஜா, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ந.திருலிங்கநாதன், சமூகசேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அகல்யா, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பார் சு.செந்தில்குமரன் ஆகியோருடன், தூதரக அதிகாரிகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
No comments