Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனியும் இடமில்லை!


பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாது. அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த அதிபர்களை தெளிவுபடுத்தும் வகையில் கல்வியமைச்சில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். 

பிள்ளைகள் ஒரு அரசின் அடிப்படை பொறுப்பாகும். இலங்கை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளதன் ஊடாக சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதற்கும், அவர்களின் உச்சகட்ட நலனிற்காக செயற்படுவதற்கும் கடமைப்பட்டுள்ளது. 

இதனூடாக குறித்த பொறுப்பு அரசிற்கும், பாடசாலை கட்டமைப்புக்கு பொறுப்பாக செயற்படும் அரச பிரதிநிதிகளான அனைத்து அதிகாரிகளுக்கும் உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். 

அண்மைக்காலமாக பதிவாகும் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களை கண்ணோக்கும் போது, பாடசாலை கட்டமைப்பிற்குள் சிறுவர்கள் முகம்கொடுக்க நேரிட்டுள்ள துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது. 

எனினும் வீடு உட்பட பாடசாலையும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான மற்றும் பொருத்தமான சூழலாக அமைய வேண்டுமென சுட்டிக்காட்டிய பிரதமர், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் அடிப்படையிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றனர். 

இதனால் பாடசாலை சூழல் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலாக மாறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென பிரதமர் வலியுறுத்தினார். 

பாடசாலை கட்டமைப்பிற்குள் பிள்ளைகளுக்கு எதிராக இடம்பெறும் எந்த வகையிலான சித்திரவதையும் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாதெனவும், பாடசாலைக்குள் பிள்ளை முகம்கொடுக்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், வேறு வகையிலான புறக்கணிப்பு, உள ரீதியான துஷ்பிரயோகம் என எதுவாக இருந்தாலும் அதனை மறைத்து அல்லது புறக்கணிப்பு செய்வதை மேற்கொள்ளக்கூடாதெனவும் பிரதமர் குறிப்பிட்டார். 

அது மறைப்பதற்கு அல்லது புறக்கணிப்பதற்கான விடயம் அல்ல. பாடசாலையின் பிரதான அதிகாரம்மிக்க நபராக பாடசாலை அதிபரினால் அவை குறித்து துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். 

அவ்வாறான செயற்பாடுகளை அலட்சியப்படுத்துவது முழு பாடசாலை கட்டமைப்பும் தோல்வியடைவதற்கு காரணமாக அமைகிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மிக விரைவாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும். 

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான பதிலளிப்பு தாமதமடையும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதற்கு முகம்கொடுத்த பிள்ளை உடல், உள ரீதியாக வழமைக்கு திரும்ப முடியாத அளவிற்கு பாதிப்பை எதிர்கொள்ளும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் துரித தலையீடு செய்வதன் ஊடாக உயிரைக் காப்பாற்றுவதற்கும், சுய கௌரவத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டுவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென பிரதமர் தெரிவித்தார். 

ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறையிலுள்ள ஏனைய அதிகாரிகள் சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையிலுமான வன்முறைகளை அடையாளம் காண்பதற்கும், தடுப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும் தேவையான அறிவு மற்றும் அது தொடர்பில் செயற்படுவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்தான அறிவைக் கொண்டிருப்பதும் மிக முக்கியமானது என்பதையும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார். 

தொடர்ச்சியாக பிள்ளைகளுடன் தொடர்புபடும் உங்கள் அனைவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பிலும், சட்டரீதியிலான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் அறிந்திருத்தல் வேண்டும். 

சிறுவர் உள்ளங்களை புரிந்துகொள்வதற்கும், சிறுவர்களுடன் சரியான முறையில் செயற்படுவதற்கும் உதவும் சிறுவர் உளவியல் கல்வியை பெற்றிருப்பதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

சிறுவர்களுக்குள் ஏற்படும் அழுத்தங்களை அடையாளம் காண்பதற்கும், சிறுவர்களுக்குள் ஏற்படும் அதிருப்தி அவர்களின் கற்றல் செயற்பாடுகளை பாதிக்கும் விதத்தை புரிந்துகொள்வதற்கும் சிறுவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும் கருணையுடனும் பழகி அவர்களுக்கு பதிலளிப்பதற்கு கல்வித் துறையில் சேவையாற்றும் அதிகாரிகள் பயிற்சிகளைப் பெற்றிருப்பது உட்பட தேவையான சந்தர்ப்பங்களில் குறித்த அறிவைப் பயன்படுத்துவதும் மிகவும் முக்கியமானதென பிரதமர் குறிப்பிட்டார். 

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் அரசின் வளமான நாடு – அழகான வாழ்க்கை கொள்கை பிரகடனத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்து வகையிலான சித்திரவதைகளிலிருந்து அவர்களை பாதுகாப்பது அதன் அடிப்படை நோக்கங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார். 

குறித்த நிகழ்வில் நீதிபதி எல்.டீ.பீ.தெஹிதெனிய, இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவர் நிமல் ஜீ புஞ்சிஹேவா, ஆணையாளர் பேராசிரியர் டீ.தனராஜ், மேல் மாகாண கல்வி செயலாளர் நிஷாந்தி ஜயசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

No comments