சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான என்.வி.க்யூ. தரச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு, தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களுக்கான சான்றிதழ்களை ஆளுநர் வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். காலத்தின் சூழலாக அது மாறியிருக்கின்றது. அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது.
எஸ்.ஓ.எஸ். தொழில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிபெற்று வெளியேறும் மாணவர்கள் தங்கள் தொழில்துறையை எப்படி அமைத்துக்கொள்கின்றார்கள் என்பதில்தான் இந்தப் பயிற்சியின் வெற்றி தங்கியிருக்கின்றது.
என்.வி.க்யூ. தரச் சான்றிதழைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்கும் வேலை வாய்ப்புக்காக செல்ல முடியும். மேலும் கற்கைகளையும் தொடரமுடியும். இந்தச் சான்றிதழைப்பெற்று தொழில் தகைமையுள்ளவர்களாக மாறியுள்ள நீங்கள், நாளை பலருக்கு தொழில்வாய்பை வழங்கக் கூடிய தொழில்முனைவோராகவும் மாறவேண்டும்.
அதேபோல இந்த நிறுவனம் தொழிற்பயிற்சி பெற்றுக்கொள்ள வருகின்ற தூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கு விடுதி அமைத்துக்கொடுப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளமையை வரவேற்கின்றேன் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வில் வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் சுஜீவா சிவதாஸ் கௌரவ விருந்தினராகவும், எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராம தேசிய இயக்குநர் திவாகர் ரட்ணதுரை சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
No comments