Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளுக்கு கொழும்பு திணைக்களங்கள் முட்டுக்கட்டை


அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றோம் என வடமாகாண ஆளுநர்  சுவிட்சர்லாந்து தூதுவரிடம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவோல்ட்டுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. 

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார் குறித்த சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநர் தூதுவரிடம், மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு மாகாணத்திலுள்ள சில கிராமங்கள் இன்னமும் பின்தங்கியுள்ள நிலையிலேயே உள்ளன என்றும் அங்கு வீதிக் கட்டுமானங்கள் கூட இல்லை.

போரின் பின்னர் தொழிற்சாலைகள் போதுமானதாக இல்லாமையால், வேலை வாய்ப்பு சவாலாக உள்ளது. விவசாயம் மற்றும் மீன்பிடி என்பனவற்றுக்கான வளம் சிறப்பாக உள்ளபோதும், மூலப்பொருட்களாகவே இங்கிருந்து ஏனைய இடங்களுக்கு அவை கொண்டு செல்லப்படுகின்றது. 

இங்கு பெறுமதிசேர் உற்பத்திகளாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் ஊடாக இங்குள்ள உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள்.

விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விலை இன்மையால் ஏற்படும் பாதிப்பையும், பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றக்கூடிய தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். போருக்கு முன்னர் இருந்த ஏற்று நீர்பாசனத்தையும் மீளவும் ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கை முதலீட்டுச் சபையால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அதன் உட்கட்டுமானங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனர்.

அத்துடன், கடந்த காலங்களில் இங்கு நிலவிய இலஞ்சம் மற்றும் ஊழல் காரணமாக பெருமளவு முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்றனர். தற்போதைய சூழலில் பெருமளவு முதலீட்டாளர்கள் முதலிடுவதற்காக முன்வருகின்றனர். 

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்து செல்வதுடன், அதனுடன் தொடர்புடைய முதலீட்டுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 

சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக இணைப்பு வீதிகள், இறங்குதுறைகள் புனரமைப்பு என்பன முன்னெடுக்கப்பட வேண்டும்.

தற்போது திருவிழாக் காலம் என்பதால் வடக்கு மாகாணத்தை நோக்கி அதிகளவு சுற்றுலாவிகள் வருகின்றனர். விடுமுறை நாள்களில் உள்ளூர் சுற்றுலாவிகளும் வடக்கை நோக்கி அதிகம் வருகின்றனர் 

அரசாங்கம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. உலக வங்கியைக் கூட இந்த மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்த ஜனாதிபதி பணித்துள்ளார். 

ஆனாலும், கொழும்பு மைய சில திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றோம்.

கடந்த காலங்களைவிட வடக்கு மாகாணத்துக்கு மூன்று மடங்கு நிதி அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்தான விமான சேவைகள் தொடர்பிலும் தூதுவர் கேட்டறிந்தார். 

அதன் போது, கொழும்பு – யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்துக்கான நேரத்தை குறைக்கும் நோக்குடன், கட்டுநாயக்காக – பலாலி இடையேயான இணைப்பு விமானச் சேவைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார மேம்பாட்டுக்காக முதலீடுகளின் அவசியத்தை தூதுவர் வலியுறுத்தினார். 

இதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், செம்மணிப்புதைகுழி விவகாரம், தையிட்டி திஸ்ஸவிகாரை விவகாரம், மீள்குடியமர்வு செயற்பாடு, சிவில் நிர்வாகத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் தூதுக் குழுவினர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டனர். 

மேலும், மாகாணசபைத் தேர்தல், மாகாணசபை முறைமை தொடர்பாகவும் ஆளுநரிடம், தூதுக் குழுவினரால் கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த காலங்களில் மாகாணசபை முறைமையை பலவீனப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். 





No comments