எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் நெடுந்தூர சேவைகள் யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்தும், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியாரின் உள்ளூர் சேவைகள் தற்போது இலங்கை போக்குவரத்துச் சபை செயற்படும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார்.
நெடுந்தூர பேருந்து நிலையத்தைச் செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இதேவேளை வடக்கு மாகாண ஆளுநர்,
இலங்கை போக்குவரத்துச் சபையினர் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து செயற்படுவதால் அவர்களுக்கு எந்தவொரு வருமான இழப்பும் ஏற்படப்போவதில்லை.
அதேநேரம் இலங்கை போக்குவரத்துச் சபையின் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. அது தற்போதும் பிரதேச செயலாளரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச காணியாகும். இவ்வாறு இருக்கத்தக்கதாக, சட்டவிரோதமாக அங்கு கடைகள் அமைத்து அதன் வாடகைப் பணம் இலங்கை போக்குவரத்துச் சபையால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.
இது முறையற்ற நடவடிக்கை. நாம் சட்டம் ஒழுங்குக்கு கட்டுப்படாத சமூகமாக இருக்க விரும்புகின்றோமா? தொழிற்சங்கங்களை வழிப்படுத்துவதுடன் மக்களுக்கு சரியான சேவையை செய்வதற்கு வழிகாட்டுவதுதான் தலைமைக்கு அழகு என்றும் குறிப்பிட்டார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், யாழ். மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள கடைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்குள்ள சகலரும் அறிவார்கள்.
இரவு நேரங்களில் அந்தக் கடைகளைச் சூழவுள்ள பிரதேசங்களில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் இங்குள்ள அதிகாரிகள் பலருக்கும் முறைப்பாடுகள் கிடைத்திருக்கும்.
அதேநேரம், கூட்டம் நடத்துவது என்பது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துவதற்கே தவிர, ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவை இங்கு வந்து ஒப்புவிப்பதற்கல்ல. இணைந்த நேர அட்டவணையில் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இரு தரப்பும் செயற்பட வேண்டும். உள்ளூர் சேவைகள் தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து இரு தரப்பும் செயற்படுத்தலாம். இதேநேரம், இதனைக் கண்காணிக்க அனைத்து பேருந்துகளுக்கும் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தலாம் எனத் தெரிவித்தார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பிரதிநிதி எஸ்.ஸ்ரீவாகீசன், மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் உண்மை அதுவல்ல என்றே அறிய முடிகின்றது.
அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் சிலருக்கு அருகில் பெரிய கடைகள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார். மேலும், இரு தரப்பும் இணைந்து பேருந்துச் சேவையை நடத்துவதே மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் எனவும் சுட்டிக்காட்டினார்.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், பேருந்து சேவைகள் மக்களின் நன்மைக்காகத்தான் செயற்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் நலனை முன்னிறுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். நெடுந்தூர பேருந்து நிலையத்துக்குச் செல்வதால் மக்களுக்குத்தான் பல்வேறு வகைகளிலும் நன்மை.
அதேநேரம், இலங்கை போக்குவரத்துச் சபையினர் சில குறைபாடுகளைச் சொல்கின்றனர். எனவே, இந்தத் திட்டத்தை செயற்படுத்தும்போது ஏற்படுகின்ற குறைகளை தொடர்ச்சியாக நிவர்த்தி செய்து இதனை நகர்த்துவோம். எதையும் செய்யாமல் குறைகூறிக்கொண்டு குழப்பிக்கொண்டிருப்பதைவிடுத்து செயற்படுத்திப்பார்ப்போம், என்றார்.
நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களுக்கான சேவைகளையும், தற்போதைய பேருந்து நிலையத்திலிருந்து உள்ளூருக்கான சேவைகளையும் இரு தரப்பும் இணைந்து இணைந்த நேர அட்டவணைக்கு அமைவாக ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து முன்னெடுப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இறுதியாகத் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலர் அ.சோதிநாதன், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், யாழ். மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பிரதிநிதி எஸ்.ஸ்ரீவாகீசன், யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பன, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சா.சுதர்சன், யாழ். மாநகரசபை ஆணையாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன், யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஜெயமான, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன், இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான நிர்வாக அதிகாரி மகேஸ் குலதிலக, இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன், இலங்கை போக்குவரத்துச் சபையின் செயற்பாட்டு முகாமையாளர் ஜே.லம்பேட், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் ஜே.சுரேந்தி, வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் எஸ்.சிவபரன், யாழ். பிராந்திய கூட்டிணைக்கப்பட்ட பஸ் கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பீ.கெங்காதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments