சர்வதேச தரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்படானது, வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் ப. பிரபாகர் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் இந் நிகழ்வானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு ஆகும்.
ஒருவருடைய வாழ்க்கைக்கு பிறப்புச் சான்றிதழ் மிகவும் முக்கியமானது எனவும் அந்தவகையில் 2021.01.01 இலிருந்து பிறந்த பிள்ளைகளுக்கு - சர்வதேச தரத்தில் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் செயற்படானது 08 ஆவது மாவட்டமாகவும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் முதலாவது மாவட்டமாகவும் யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்படுவது சிறப்பான விடயம் ஆகும்.
QR கோட்டினை உள்ளடக்கியதன் மூலம் இலகுவில் பிறப்புச் சான்றிதழை எடுக்ககூடிய வகையில் அமைந்துள்ளதுடன், ஆட்பதிவுத் திணைக்களத்துடன் இணைந்து "எனது இலக்கம்" என்பது தேசிய அடையாள அட்டை இலக்கமாக வருவதன் மூலம் பிள்ளைக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை தெரிந்து கொள்வதும் சிறப்பான விடயம்.
இச் சான்றிதழ் தமிழுடன் ஆங்கில மொழியும் சேர்த்து வழங்கப்படுவது சிறப்புக்குரியது. இதன் மூலம் மொழிபெயர்ப்பின் தேவைப்பாடு அவசியமற்றதாகின்றது. ஆதலால் பெற்றோர்கள் இவ் பிறப்புச் சான்றிதழ் பேணிப் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தேசிய பிறப்புச் சான்றிதழை மாவட்ட செயலர் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கினார்.
நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் சங்கத்தினால் அரசாங்க அதிபர் நிரந்தரமாக நியமிக்கப்பட்டமைக்காக அரசாங்க அதிபருக்குபொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதி பதிவாளர் நாயகம், காணிப் பதிவாளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பதிவாளர்கள், கிராமிய பிரதேச பதிவாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.
No comments