வீதி மின் விளக்கு கம்பத்திற்கு மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்வதனால் , உயிராபத்துக்கள் ஏற்படும் நிலைமை காணப்படுவதானல் அது தொடர்பில் மின்சார சபையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதி மின் விளக்கு கம்பத்தின் மிக அருகாக உயர் மின் அழுத்த மின் வடம் செல்கின்றது. குறித்த மின் வடம் காற்று காரணமாக தொய்வு நிலையில் காணப்படுவதால் அது மின் விளக்கு கம்பத்திற்கு அருகாக செல்கிறது.
அதனால் மின் விளக்கு கம்பத்தில் மின் வடம் தொடுகையிடுமாயின் ஆபத்துக்கள் ஏற்படலாம் என அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
குறித்த மின் விளக்கு கம்பத்தில் பழுதடைந்த மின் விளக்கினை திருத்த முற்பட்ட நல்லூர் பிரதேச சபை ஊழியர் உயர் மின் அழுத்த மின் வடத்தில் இருந்து பாய்ந்த மின்சாரம் காரணமாகவே மின்சார தாக்குதலுக்கு இலக்கானார், இடுப்பு பட்டி அணிந்து , பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டு இருந்தமையால் , தீக்காயங்களுடன் உயிராபத்து இன்றி தப்பி , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தட்டாதெரு சந்திக்கு அண்மையில் வீதி மின் விளக்கு கம்பத்தில் படர்ந்திருந்த தாவர கொடியினை உணவாக உட்கொள்ள முயன்ற மாடு ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தது.
எனவே குறித்த மின் விளக்கு கம்பம் தொடர்பில் மின்சார சபையினர் கவனம் செலுத்தி , அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
No comments