'பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்' (Safe Road, Safe health) என்ற தொனிப்பொருளில் வீதி விபத்துக்களை தடுப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் யோசனையை முன் வைத்துள்ளார்.
விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது, குழந்தை மருத்துவ நிபுணர், விபத்துத் தணிப்புத் தொடர்பான விடயத்தை தன்னார்வமாக முன்னெடுத்து வரும் தனது திட்டம் தொடர்பில் தெளிவு படுத்தும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த கலந்துடையாடலில், வடக்கு மாகாணத்தில் விபத்துக்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஆளுநர் முன்னுரையில் குறிப்பிட்டார். .
இதன் பின்னர், யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இடம்பெற்ற விபத்துக்கள், அறவிடப்பட்ட தண்டப்பணம் தொடர்பான விவரங்களை முன்வைத்ததுடன், விபத்துக்களுக்கான காரணிகள், வீதிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தினார்.
மேலும், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் காணப்படும் அனைத்தையும் அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்குமாக இருந்தால் அதனைச் செயற்படுத்த தயார் எனவும் குறிப்பிட்டார்.
அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.
அத்துடன் முதல்கட்டமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்புணர்வுச் செயற்பாட்டை ஆரம்பிப்பது என்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் மூத்த உதவிச் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
No comments