அதிகரித்துச் செல்லும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் தரமற்ற பொருட்களின் விற்பனையால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.
வேலணை பிரதேச சபையின் இரண்டாவது மாதாந்த கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் அசோக்குமார் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
எமது வேலணை பிரதேசமானது பொருளாதார ஈட்டலில் பின்தங்கிய மக்களைக் கொண்டதாக இருக்கின்ற நிலையில் மக்களுக்கு கிடைக்கின்ற பொருட்களுக்காவது உணவுப் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதிசெய்வதற்கு எமது பிரதேச சபை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பல பொருட்கள் குறிப்பாக, அத்தியாவசிய பொருட்கள் , மரக்கறி வகைகள் மற்றும் கடலுணவு பொருட்கள் ஆகியவை யாழ் நகரில் விற்கப்படும் விலையை விட இரட்டிப்பான விலைக்கு கூட இங்கு பெறமுடியாத நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக கடல் வளம் எமது பிரதேசத்தின் முதற்தர வளமாக இருக்கின்றது. கடந்த காலத்தில் கடற்றொழில் அமைச்சும் அத்தொழிலை முன்னெடுக்கும் மக்களுக்கு பலதரப்பட்ட மானியங்கள் மற்றும் சலுகைகளை தொடர்ச்சியாக வழங்கிய வண்ணமே இருந்திருக்கின்றது.
அதேபோன்று வெளிநாடுகளும் உதவித் திட்டங்கள் என்ற போர்வையில் அந்த மக்களுக்கு பலவற்றை வழங்கி வருன்றன. இதை இனியும் இந்த புதிய அரசும் தொடர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆனாலும் கடலுணவு பொருட்கள் மட்டும் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு மலிவாக கிடைப்பதில்லை என்ற ஏக்கம் வேலணை வாழ் கடற்றொழில் சாரா ஏனைய மக்களின் மனதுகளில் ஏக்கமாக இருக்கின்றது.
இதற்கு சந்தைப்படுத்தலில் வெளியூர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால் கடலுணவின் விலை உச்சம் பெறுகின்றது என்ற காரணம் முன்வைக்கப்படுகின்றது.
இது கடற்றொழிலாளர்களுக்கு நன்மையானதாக இருக்கின்ற ஒரு விடயம்தான். அது வரவேற்கத்தக்கதொன்றாகவும் உள்ளது. ஆனால் உள்ளூர் நுகர்வோர் அதனால் பெரும் ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர்.
அந்தவகையில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மலிவாக உள்ளூர் நுகர்வோருக்கு, குறிப்பாக மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதை அல்லது கிடைப்பதை உறுதி செய்வதில் எமது பிரதேச சபைக்கும் பொறுப்புள்ளது.
அதேபோன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அடிக்கடி உயர்வதால், சில வர்த்தகர்கள் பொருட்களைப் பதுக்கி வைத்து செயற்கையாக விலையை உயர்த்துவதாலும் எமது மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
அதுமட்டுமல்லாது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், பாவனைக்கு உதவாத பொருட்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் கையாளப்படும் இடங்களில் பரவலாக இருக்கின்றதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் எனது மக்களின் ஆரோக்கியமே கேள்விக்குறியாகிறது.
இதற்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் விலை கட்டுப்பாடுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது வர்த்தகர்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை என்ற நிலையும் உள்ளது.
அதுமட்டுமல்லாது துறைசார் அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாமையும் வர்த்தகர்கள் விதிமுறைகளை மீறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
எனவே பிரதேச மக்களின் நலன்களைப் பாதுகாக்க - பிரதேச சபை பின்வரும் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்துவது அவசியம் என நான் இந்த சபையில் முன்மொழிகின்றேன்.
அதனடிபையில் பிரதேச சபை உறுப்பினர்கள், உணவு ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை உருவாக்கல் -
குறித்த குழுவினர் சந்தைகள், கடைகள் மற்றும் உணவு பொருட்களை கையாளும் நிலையங்களில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ளல்-
விலைப்பட்டியல் சரியான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதா, பொருட்கள் பதுக்கப்படுகிறதா, தரமற்ற பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தல் அத்துடன் விலை கட்டுப்பாட்டை மீறுவோர், பதுக்கலில் ஈடுபடுவோர் மற்றும் தரமற்ற பழுதடைந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதுமட்டுமல்லாது குறித்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, உரிய அபராதங்கள் மற்றும் தண்டனைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தல்
இவற்றுக்கு மேலாக உணவுப் பாதுகாப்பு, சரியான விலை நிர்ணயம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை சமூக மட்ட அமைப்புகள் ஊடாக மக்களிடம் கொண்டுசெல்லல் -
முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான இலகுவான இரகசியமான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தல் -
விழிப்புணர்வு சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பொது இடங்களில் ஒட்டுதல் -
உணவு உற்பத்தி மற்றும் கையாளும் தரப்பினர் அனைவரும் சுகாதாரச் சான்றிதழைப் புதுப்பிப்பதை அல்லது எடுத்தக்கொள்வதை கட்டாயமாக்கல் –
பிரதேச செயலகம், நுகர்வோர் அதிகார சபை, சுகாதார அமைச்சு மற்றும் பிற சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்தல் -
இவ்வாறான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமும் இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதுடன் மேற்கண்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம், உணவுப் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்தி, பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இச்சபையில் இருக்கும் அனைவருக்கும் உண்டு என நம்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்
No comments