Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மண்டைதீவில் சர்வதேச மைதானம் - ஆரம்ப பணிகளை முதலாம் திகதி ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார்.


மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமைச்சர் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரன் ஆகியோருடன் கூட்டாக ஊடக சந்திப்பினை நடத்தி இருந்தார் 

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , 

ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அவை வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்தே ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதற்காக எதிர்வரும் முதலாம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ள ஜனாதிபதி , மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான ஆரம்ப நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

அதனை தொடர்ந்து யாழ் .மாவட்ட செயலகத்தில் கடவுசீட்டு , அலுவலகத்தை திறந்து வைத்து , கடவுசீட்டு வழங்கும் பணிகளை ஆரம்பித்து வைப்பார். 

பின்னர் மயிலிட்டி துறைமுகத்திற்கு விஜயம் செய்து, துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் யாழ் . பொது நூலகத்திற்கு விஜயம் செய்து , நூலகத்தை பார்வையிடவுள்ளதுடன் ,  சில நூல்களையும் அன்பளிப்பு செய்யவுள்ளார். 

மறுநாள் 02ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து , வட்டுவாகல் பால புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைப்பார். அத்துடன் தென்னை முக்கோண வலய செயற்திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 

எமது அரசாங்கம் வடக்கு கிழக்கை முன்னிலைப்படுத்தி வேலை திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. தற்போது நாட்டின் வருமானம் அதிகரித்து உள்ளது. அதனால் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்திக்காக அதிகளவான நிதிகளை ஒதுக்கீடு செய்யப்படும்.அதிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தியே அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். 

No comments