- மயூரப்பிரியன் -
யாழ்ப்பாணம் மண்டைதீவு , யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கு பயணிக்கும் போது, தீவகங்களின் நுழைவாயிலாக உள்ளது. யாழ்,நகர் மத்தியில் இருந்து சுமார் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. தரை வழி பாதை ஊடாக செல்ல கூடிய இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்ட அழகிய தீவே மண்டைதீவு. அது தற்போது இரு விடயங்களில் பெரும் பேசு பொருளாக உள்ளது.
ஒன்று மண்டைதீவு அமையவுள்ள சர்வதேச துடுப்பாட்ட மைதானம்.
மைதானத்திற்கான ஆரம்ப பணிகளை நாளைய தினம் திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கில் ஒரு சர்வதேச மைதானம் அமைய பெற வேண்டும் என்பதற்காக பலர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.
சர்வதேச மைத்தனத்துடன் , சர்வதேச தரத்திலான "கிரிக்கெட் அக்கடமி" ஒன்றினையும் யாழ்ப்பாணத்தில் நிறுவ வேண்டும் என யாழ்ப்பாண துடுப்பாட்ட சங்கம் ,இலங்கை கிரிக்கெட் சபையிடம் பல்வேறு தடவைகள் கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் , அதற்கு இலங்கை கிரிக்கெட் சபையோ , தெற்கு அரசியலோ முழு மனது வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில் கடந்த வருடம் , அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியனதும் , அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்தும் மீண்டும் மண்டைதீவு சர்வதேச மைதானம் பேசு பொருளானது. மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைக்க வேண்டும் என மீண்டும் பலரும் முனைப்புடன் பணிகளை ஆரம்பித்தனர்.
அதன் ஒரு அங்கமாக இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடியிடமும் சர்வதேச மைதானம் அமைப்பதற்கான கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் குமார கமகேவின் குழுவினர் மண்டைதீவு பகுதிக்கு சென்று மைதானம் அமையவுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
அத்துடன் , இந்திய துணை தூதரக தூதுவர் சாய் முரளியை சந்தித்தும் மண்டைதீவு சர்வதேச மைதானத்திற்கான நிதியுதவியை கோரி இருந்தனர்.
இந்நிலையிலையே நாளைய தினம் ஜனாதிபதி தலைமையில் , மண்டைதீவு சர்வதேச மைதானத்திற்கான ஆரம்ப வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மைதானத்திற்கு எதிர்ப்பு.
அதனை தொடர்ந்து மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைய பெற கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.
மண்டைதீவு இயற்கை வளங்களை கொண்ட தனித்துவமான தீவாகும். அங்கு பருவ காலத்தில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி செல்லும்.
அதனை சூழவுள்ள கடல்நீரேரிகள் கண்டல் தாவரங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு பல இயற்கை வளங்களை கொண்ட அழகிய தீவில் , சர்வதேச விளையாட்டு மைதானம் அமைய பெற்றால் , அதனோடு சேர்ந்து பொருளாதார அபிவிருத்தி எனும் பெயரில் தீவு முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டு விடும். இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும்.
சர்வதேச மைதானம் அமையப்பெற்றால் , அதனுடன் , சுற்றுலா துறை அபிவிருத்தி என மண்டைதீவில் பாரியளவிலான நட்சத்திர , ஆடம்பர தங்குமிடங்கள் அமைய பெறும் , வேறு கட்டங்கள் , வணிக மாளிகைகள் என்பன அமையப்பெற்று கடல் நீரேரிகள் ஆக்கிரமிக்கப்படும். அதனால் மண்டைதீவென்னும் தீவு கட்டங்களால் நிரம்பி , அப்பகுதியில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடும்.
மண்டைதீவில் உள்ள பூர்விக குடிகள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமைகள் உருவாகும் என மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைய பெற கூடாது என கூறும் தரப்புக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்
எது எப்படியோ , மண்டைதீவில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்த முயற்சியின் பயனாக நாளைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மைதானத்திற்கான ஆரம்ப பணிகளை தொடக்கி வைக்க உள்ளார்.
எமது இந்த ஆட்சி காலத்தினுள் மைதானம் அமைக்கப்பட்டு , சர்வதேச போட்டிகளை நடாத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் உறுதியுடன் கூறி இருந்தார்,
மண்டைதீவு படுகொலை.
மண்டைதீவில் சர்வதேச மைதானம் அமைய பெறவுள்ள செய்திகள் சூடு பிடித்திருந்த கால பகுதியில் தான். மண்டைதீவில் படுகொலை செய்யப்பட்டவர்கள் , அங்குள்ள கிணறுகளில் போடப்பட்டு மூடப்பட்டுள்ளதாகவும் , மீண்டும் அந்த கிணறுகள் தோண்டப்பட்டு , அங்கு மூடப்பட்டுள்ள தம் உறவுகளுக்கு நீதியை பெற்று தாருங்கள் என அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
1990ஆம் ஆண்டு யாழ்ப்பாண கோட்டைக்குள் இராணுவத்தினர் முற்றுகைக்குள் அகப்பட்டிருந்தனர்.
அந்த முற்றுகையை தகர்த்து , கோட்டைக்குள் இருக்கும் சக இராணுவத்தினரை மீட்க 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி ஊர்காவற்துறை பகுதியில் இருந்து இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த இராணுவ நடவடிக்கையின் போது, ஊர்காவற்துறை , அல்லைப்பிட்டி, மண்கும்பான் பகுதிகளில் கண்களில் எதிர்ப்படுபவர்களை படுகொலை செய்தவாறு இராணுவத்தினர் முன்னேறினர்
அதனை தொடர்ந்து மண்டைதீவை முழுமையான இராணுவ முற்றுகைக்குள் கொண்டு வந்து , ஊருக்குள் இராணுவத்தினர் புகுந்தனர் 24 , 25 மற்றும் 26ஆம் திகதி ஆகிய மூன்று தினங்களும் மண்டைதீவு முற்று முழுதாக இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்தன.
அந்நேரம் ஊரில் வீடுகளுக்குள் சென்ற இராணுவத்தினர் , சந்தேகத்திற்கு இடமான இளைஞர்கள் யுவதிகளை கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலோனர் காணாமல் ஆக்கப்பட்டனர் , சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து தேவலாயத்தில் மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர். அவ்வேளை அங்கு வந்திருந்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ தலைமையிலான இராணுவத்தினர் 25 ஆண்களை வேலைக்கு என அழைத்து சென்றனர். அவர்களில் 24 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி சென்ற நிலையில் தற்போதும் வெளிநாடொன்றில் உயிருடன் வாழ்கின்றார்.
அதன் பின்னரான கால பகுதியில் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் அராலி முனை பகுதியில், விடுதலை புலிகள் மேற்கொண்ட கன்னி வெடி தாக்குதலில் அவருடன் 09 இராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர்
அதேவேளை , மண்டைதீவில் கைது செய்து காணாமல் போன பலர் படுகொலை செய்யப்பட்டு , மண்டைதீவு முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள கிணறு , றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு அருகில் உள்ள கிணறு மற்றும் மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறு ஆகிய கிணறுகளுக்குள் போடப்பட்டு , கிணறுகள் மூடப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சில மாதங்களில் மீண்டும் மண்டைதீவு பகுதிக்கு வந்த வேளை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள கிணற்றினை தோண்டிய வேளை , அதனுள் இருந்து கைகள் பிணைக்கப்பட்ட நிலையில், சடலங்கள் மீட்கப்பட்டன என கூறப்படுகிறது.
மீண்டும் உள்நாட்டு போர் தொடங்க 1991ஆம் ஆண்டு மண்டைதீவு மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனால் கிணறுகளுக்குள் போடப்பட்டு மூடப்பட்ட சடலங்களை தொடர்ந்து மீட்க முடியவில்லை.
இவ்வாறான நிலையில் தற்போது மீண்டும் கிணறுகளுக்குள் புதையுண்டு உள்ளவர்களுக்கு நீதி கோரி அப்பகுதி மக்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
மண்டைதீவு கிணறுகளுக்குள் புதையுண்டுள்ளவர்களுக்கு நீதி வேண்டும் என கடந்த ஜூன் மாதம் நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் கோரிக்கை வைத்தார்.
மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் கடந்த ஏப்ரல் மாதம் ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இவ்வாறான நிலையில் கடந்த 26ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் சடலங்களை போட்டு , மூடப்பட்டதாக கூறப்படும் கிணற்றடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதன் போது , அந்த கிணற்றினுள் 40க்கும் மேற்பட்ட சடலங்களை போட்டு , அயல் வீட்டில் இருந்த வைக்கோல் , எரு , கல்லுகள் , மாட்டு வண்டில் ஒன்று என்பன போடப்பட்டு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
மண்டைதீவில் அவ்வாறு மூடப்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட கிணறுகளை தம்மால் அடையாளம் காட்ட முடியும் எனவும் , அவ்வாறான கிணறுகளை மீண்டும் தோண்டி புதைக்கப்பட்ட தம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மண்டைதீவுக்கு சர்வதேச விளையாட்டு மைதான ஆரம்ப பணிகளை ஆரம்பித்து வைக்க வருகை தரவுள்ள ஜனாதிபதி கிணறுகளுக்குள் புதைக்கப்பட்ட எம் உறவுகளுக்கு நீதியை பெற்று தர வேண்டும் என கோரி நிற்கின்றனர்.
No comments