கிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் கீழ் பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் . கண்புரை சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 36 பேருக்கும் இரண்டு வார கால பகுதிக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களை நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது போது கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளது. இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர்.
அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகள்.
மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள்.
பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளது.
அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலகத்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளது என மேலும் தெரிவித்தார்.
அத்துடன் மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலர் கே. சிவகரன், மேலதிக செயலர் (காணி) பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
No comments