யாழ்ப்பாணம் , நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட ஆடியபாதம் வீதியில் டிப்பர் மற்றும் பாரவூர்திகள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன
இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் விடுத்துள்ள அறிவித்தலில்,
வீதிப்போக்குவரத்து இலகுபடுத்தும் நோக்கோடு முன்பள்ளி சிறார்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்கு செல்லும் நேரங்கள் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துக்கள் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டு பின்வரும் விடயங்கள் நல்லூர் பிரதேச சபையின் சபைத் தீர்மானங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
அவ் வகையில் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் மண் ஏற்றிச் செல்லும் டிப்பர் வாகனங்கள் முற்பகல் 6 மணி தொடக்கம் பிற்பகல் 6 மணி வரை ஆடியபாதம் வீதியூடாக பயணிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பதோடு ஏனைய பாரவூர்திகள் முற்பகல் 7 மணி தொடக்கம் முற்பகல் 9 மணி வரையும் பிற்பகல் 12.00 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணிவரையும் கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை எதிர்வரும் 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பும் கண்காணிப்பும் வழங்குமாறு யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும், கோப்பாய் பொலிசாருக்கும் கடிதம் மூலம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களின் பொதுப்போக்குவரத்தினை இலகுபடுத்தல் செயற்றிட்டம் முதற்கட்டமாக கல்வியங்காட்டுச் சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதியில் செயற்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் குறித்த செயற்றிட்டம் ஏனைய வீதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
No comments