கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் நடைமுறைகளை பொலிஸார் தலையீடு செய்து மாற்றியுள்ளதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு , யாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு ஆலய பரிபாலன சபையினர் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.கோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. 07ஆம் திருவிழா கடந்த 06ஆம் திகதி இடம்பெற்றது. அதன் போது 07ஆம் திருவிழா உபயக்காரர் , திருவிழா நடைமுறைகளை மாற்ற முயன்ற போது , அதற்கு ஆலய பரிபாலன சபையினர் மறுப்பு தெரிவித்தனர்.
அதனை அடுத்து கோப்பாய் பொலிசாரை அழைத்த உபயக்காரர் , பொலிசாரின் உதவியுடன் , 75 ஆண்டு கால திருவிழா நடைமுறைகளை மாற்றி இருந்தனர் .
பொலிஸார் பரிபாலன சபையினரை மிரட்டியே திருவிழா நடைமுறைகளை மாற்றியதாகவும் , ஆலய திருவிழாவில் தேவையற்ற விதத்தில் பொலிஸார் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்தியமை , அங்கிருந்த பக்தர்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையிலையே ஆலய விடயத்தில் பொலிஸார் தலையீடு செய்ய கூடாது எனவும் , கடந்த 06ஆம் திகதி ஆலய விடயத்தில் தலையீடு செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆலய பரிபாலன சபையினர் , யாழ் . மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளனர்.
No comments