தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை
கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.
தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை.
இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம்.
குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார்.
மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார்.
No comments