யாழ்ப்பாணத்தில், ஆலயம் ஒன்றினில் பூஜை செய்ய சென்ற சர்மா திடீர் சுகவீனம் காரணமாக ஆலயத்தினுள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்
மானிப்பாய் - சுதுமலை தெற்கு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கடந்தவாரம் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலை ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில், ஏழாலை - மயிலங்காடு வைரவர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பூஜை செய்ய சென்ற வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பில் வர தனது தந்தையாருக்கு தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.
அதனை அடுத்து அவரது தந்தையும் உறவினர்களும் ஆலயத்திற்கு சென்ற வேளை ஆலயத்தினுள் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
உடற்கூற்று பரிசோதனைகளில், நுரையீரலில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
No comments