யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் விக்ரோறியா வீதி அமைந்திருக்கும் பகுதியில் சட்டவிரோதமாக பிரதான வீதிக்கு குறுக்காக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை தொடர்பில் நேற்று நடைபெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் கடும் அமளி துமளி ஏற்பட்டது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு கூட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தலைமையில் கூடியது.
இதன்போது யாழ் நகரில் எந்த வித முறையான அனுமதியும் இல்லாது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளருக்கே தெரியாமல் மாநகர சபை உத்தியோகத்தர்கள் குறித்த சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்ததாக மாநகர சபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினார்.
இதன்போது மாநகர சபை பிரதி ஆணையாளர் சபை அமர்வு நடைபெற்றபோது அழைக்கப்பட்டு விளக்கம் கோரப்பட்டது.
ஒவ்வொரு மாநகர சபை உறுப்பினராக எழுந்து கருத்து தெரிவிக்குமாறு கோரியபோது
பல உறுப்பினர்களும் எழுத்து உரத்து கருத்து தெரிவிக்க முற்பட்டதால் மாநகர சபை அமர்வில் அமைதியின்மை ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் கோபமடைந்த மாநகர முதல்வர், இவ்வாறு கூட்டத்தை நடத்த விடாமல் தொடர்ந்து செயற்பட்டால் பொலிஸ் பாதுகாப்புடன் கூட்டத்தை நடத்துவேன் - என்றார்.
இதனால் கோபமடைந்த மாநகர சபை உறுப்பினர், நீங்கள் இராணுவத்தையும் அழையுங்கள். நீங்கள் ஊழலுக்கு துணை போகிறீர்கள் என குற்றஞ்சாட்டினார்.
இதன்போது சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மேம்பால பதாகை அகற்றப்பட்டுள்ளதாகவும் அந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிடவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து நிலைமை சுமூகமானது.
No comments