உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம் ஒன்று கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கண்டி தலைமையக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டபோது, அதில் இருவர் பயணித்ததாகவும், பொலிஸார் பயன்படுத்தும் வகையிலான இரண்டு வாக்கி-டாக்கிகள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த ஜீப்பின் முன்பக்க கண்ணாடி தவிர, அனைத்து கண்ணாடிகளும் முழுவதும் கறுப்பு நிறத்தில் இருந்ததாகவும், இது கண்டி பகுதி வீதிகளில் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஜீப் வாகனம் மாற்றியமைக்கப்பட்டதா, அதன் நிறம் மாற்றப்பட்டதா, அல்லது எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து கண்டி தலைமையக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திடம் அறிக்கை கோரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், இந்த ஜீப் வாகனம் கண்டி பகுதியில் இயங்கும் மஹா சொஹொன் பலகாய என்ற அரசியல் அமைப்பின் உறுப்பினர் அமித் வீரசிங்கவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை வாக்குமூலம் அளிக்க வருமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.



.webp)


No comments