ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்றைய தினம் சனிக்கிழமை ஜப்பானை சென்றடைந்தார்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க, இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமதா, மற்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஜனாதிபதியை சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய பேரரசரைச் சந்திக்கவுள்ளார்.
ஜப்பானிய பிரதமருடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை முன்னிலைப்படுத்தி உச்சிமாநாட்டு சந்திப்பு ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில், ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளின் பங்கேற்புடன் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
இதுதவிர, ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 'எக்ஸ்போ 2025 ஒசாகா' கண்காட்சியிலும் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க்கிற்குப் பயணித்த நிலையில், அங்கிருந்து இந்த ஜப்பான் விஜயத்தை மேற்கொள்கிறார்.






No comments