அரச உத்தியோகத்தர்களுக்கான 150 மணி நேர இரண்டாம் மொழி சிங்களப் பாடநெறியின் இறுதிநாள் கலை நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனும், சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் கே. சிவகரன், யாழ்ப்பாண உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்ஷினி, இரண்டாம் மொழி சிங்கள வளவாளரான சச்சிதானந்தம் நந்தன், அரசகரும மொழிகள் திணைக்களத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டுப் பிரிவின் வடமாகாண ஒருங்கிணைப்பாளருமாகிய நடராஜா உமாநாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலர் உரையாற்றும் போது,
இரண்டாம் மொழி கற்பதற்கான 150 மணித்தியாள பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களை வாழ்த்துகிறேன். உத்தியோகத்தர்களின் வினைத்திறனாக சேவைக்கு இப்பயிற்சி நெறி உதவும்.
மேலும் டிப்ளோமா கற்கைகளைக் கற்று மேன்மேலும் இரண்டாம் மொழிகளில் பாண்டித்துவம் பெற வேண்டும். இன்றைய நிகழ்வில் இடம்பெற்ற கலாசார நிகழ்வுகளில், அவதானித்த வகையில் உத்தியோகத்தர்களின் மொழி உச்சரிப்பு சிறப்பாக உள்ளது. ஆரம்ப கட்டமாக அலுவலக நடைமுறைகளை சமாளிக்க கூடியவகையில் இப் பயிற்சி நெறி அமைந்துள்ளது. அந்த வகையில் வளவாளர்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந் நிகழ்வில் வளவாளர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், 100 உத்தியோகத்தர்கள் இப் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments