மக்கள் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இவ்வகையான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 28 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்படவுள்ள புதிய தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்றைய தினம் இடம்பெற்றது.
அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தபால் நிலையம் அமைய பெறுவதால் அச்சுவேலி மற்றும் அதன் சூழவுள்ள மக்களுக்கு நவீன வசதிகளுடனான வேகமான மற்றும் திறம்படச் செயல்படும் தபால் சேவைகளை வழங்கும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.
மக்கள் நலனுக்காக முன்னெடுக்கப்படும் இவ்வகையான அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளமாக அமையும்.
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் எங்கள் அர்ப்பணிப்பு தொடர்ந்து நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன், தபால் மா அதிபர், வடமாகாண பிரதி தபால் மா அதிபர், தபால் நிலைய அதிகாரிகள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.










No comments